ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருந்தளித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டை ஒட்டி ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். நேற்று ராவல்பிண்டி சென்று இறங்கிய ஜெய்சங்கரை, விமான நிலையத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை இயக்குநர் ஜெனரல் இலியாஸ் மெகமூத் நிஜாமி வரவேற்றார்.
தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் விருந்தினர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கடந்த 9 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் .
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கடைசியாக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார் .
இன்று புதன் கிழமை காலையில் இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியா தூதரகத்தில் ஜெய்சங்கர் தனது சகாக்களுடன் காலையில் வாங்கிங் சென்றார். இந்திய தூதரகத்தில் செடியையும் நட்டார். இது தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்