டாட்டா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்தது குறித்து அவருடன் பயணித்து, விபத்தில் உயிர்பிழைத்த டேரியஸ் பண்டோலே பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலதிபரும், முன்னாள் டாடா சன்ஸ் தலைவருமான சைரஸ் மிஸ்திரி(54) கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸில் வந்தார்.
சைரஸ் மிஸ்திரி பலி!
அப்போது மகராஷ்டிராவில் உள்ள கோலாகன் அடுத்த பால்கர் பகுதியில் வரும் போது, அங்கிருந்த சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி கார் பயங்கர விபத்தில் சிக்கியது.
இதில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தின்போது காரை ஓட்டிய மகப்பேறு பெண் மருத்துவர் அனகிதா(55) மற்றும் அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பண்டோலே(60) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டேரியஸ் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டேரியஸ் வாக்குமூலம்!
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காசா காவல் நிலைய போலீசார், டேரியஸ் வீட்டில் சுமார் ஒன்றரை மணி நேரம் அவரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றனர்.
அதன்படி, ”கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது, தனது மனைவி அனாகிதா மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது நெடுஞ்சாலையில் தங்களது காருக்கு முன்னால் சென்ற கார் மூன்றாவது பாதையில் இருந்து இரண்டாவது பாதைக்கு சென்றது. அனாகிதா அதனை பின்தொடர்ந்து ஓட்டினார்.
ஆனால் அந்த பாதையில் சென்றபோது ஒரு லாரி இருப்பதைக் கண்டார். இதனால் அவரால் 2-வது பாதையில் செல்ல முடியவில்லை.
மேலும் எங்களது கார் சென்ற 3-வது பாதையும் குறுகி கொண்டே சென்றதால் ஆற்றுப்பால தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.” இவ்வாறு டேரியஸ் பண்டோல் கூறினார்.
இன்னும் 2 அறிக்கைகள்!
எனினும் டேரியஸின் மனைவி அனாகிதா பண்டோல் இன்னும் மருத்துவமனை சிகிச்சையில் தான் உள்ளார். அவரது வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.
மேலும் விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ் பென்ஸின் இறுதி அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை.
இரண்டு அறிக்கைகள் வந்தததும், விபத்தின் முழு விவரம் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா