இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாலை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. இதையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசப்பட்டது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய இந்த தாக்குதல் உலக நாடுகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரான் தாக்கியதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் .
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நமது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் அணு குண்டை வீசிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கூட இஸ்ரேல் மீது இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கும் என்கிற ரீதியில் பேசியிருந்தார். அணுகுண்டை பற்றிதான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக கருதப்பட்டது. ஈரானிடம் அணுகுண்டு உள்ளதா என்று தெரியவில்லை. உலகில் 9 நாடுகளிடம்தான் அணுகுண்டுகள் உள்ளன.
அதே வேளையில், ஈரான் ரகசியமாக அணு குண்டைத் தயாரித்ததாக இஸ்ரேல் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளாக ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஈரான் செல்ல வேண்டாம் : இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!
18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் வார்னிங்!