பிரம்மபுத்திராவில் பிரம்மாண்டமாக 13 லட்சம் கோடியில் அணை கட்டும் சீனா: இந்தியா மீது வாட்டர் பாம் வீச திட்டம்?

Published On:

| By Kumaresan M

திபெத் நாட்டில் இமய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைவதற்கு முன் மிகப்பெரிய வளைவில், 3000 மீட்டர் பள்ளத்தாக்கில் பாய்கிறது. இந்த இடத்தில் சூப்பர்டேம் என்று அழைக்கப்படும் பிரம்மாண்ட அணையை சீனா கட்ட திட்டமிட்டுள்ளது.

சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்திரா நதி மீது கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது.

இந்த அணையைக் கொண்டு, 60 ஆயிரம் மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம். இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும் என்றும் கூறுகிறார்கள். புதிய இந்த அணை, பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் பிரம்மபுத்திரா நதி நீரை பகிர்வது குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒப்பந்தம் உள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். 2023 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் இன்னும் எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக புதுப்பிக்கப்படவில்லை.

தற்போது உலகின் மிகப் பெரிய அணையாக சீனாவின் த்ரீ கிரீகிஸ் பார்க்கப்படுகிறது. இந்த அணையின் கட்டுமானத்தால் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்படியிருக்கையில், இதை விட 3 மடங்கு பெரியதாக புதிய அணை கட்டப்படவுள்ளது. இந்த அணை என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.

இந்திய எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவுக்குள் இந்த அணை கட்டப்படுகிறது. வெள்ள காலங்களில் தண்ணீரை நிரம்ப தேக்கி வைத்து அப்படியே மொத்தமாக திறந்து விட்டால், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களே காணாமல் போகும் அபாயம் உண்டு. இதை ‘வாட்டர் பாம் ‘என்று கூறுகிறார்கள். இந்த அணையின் கட்டுமானத்துக்கு 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 13 லட்சம் கோடி ஆகும்.

எம்.குமரேசன்

பிரியாணி, பிரியாணி, பிரியாணி… தமிழகத்தில் சந்தை மதிப்பு 10 ஆயிரம் கோடி!

பாத்திரமாகவே உருமாறும் வித்தையறிந்த பசுபதி… காத்திருக்கும் கதைகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel