பாகிஸ்தானின் குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகிலுள்ள மஷ்காப் சுரங்கப்பாதை வழியாக 425 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது பலூச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்தவர்கள் கடந்த 11ஆம் தேதி மதியம் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைப்பிடித்தனர்.
அடுத்து 48 நேரத்திற்குள் பாகிஸ்தான் சிறையில் உள்ள தங்களது அமைப்பை சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், நிறைவேற்ற தவறினால் ரயிலை வெடிக்கச்செய்து பணயக் கைதிகளை கொன்றுவிடுவோம் என்றும் பலூச் கிளர்ச்சிக் குழு கெடு விதித்தனர். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று அதிகாலை நிலவரப்படி 155 பயணிகள் மீட்கப்பட்டனர். மீதமுள்ள பெட்டிகளில் உள்ள 250 பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம் 33 பலூச் விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களையும் கொன்று பயணிகள் அனைவரையும் மீட்டுவிட்டதாக நேற்று இரவு தெரிவித்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ லெஃப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப், ”நேற்று மாலை இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளும் அழித்தொழிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆபரேஷன் நேற்று மாலையுடன் வெற்றிகரமாக முடிந்தது. பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் 21 பயணிகள் பலியாகியுள்ளனர்.
இந்த கொடூரமான செயலால் முழு தேசமும் அதிர்ச்சியடைந்துள்ளது. அப்பாவி உயிர்களை இழந்திருக்கிறோம். இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் அமைதிக்கான உறுதியை அசைக்க முடியாது” என்று தெரிவித்தார்.
எனினும் பட்டப்பகலில் ரயிலை கடத்திய இந்த சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தின் வீக்னஸை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
சரி… பலூச் அமைப்பு என்பது என்ன? அவர்கள் ஏன் விடுதலைக்காக போராடுகிறார்கள் என்று பார்க்கலாம். பாகிஸ்தானின் தெற்கே எல்லை மாகாணமாக அமைந்துள்ளது பலூசிஸ்தான். இந்த மாகாணத்தை சேர்ந்த விடுதலை அமைப்புதான் பலூச் விடுதலை ராணுவம். இவர்கள், பாகிஸ்தானில் உள்ள மற்ற பயங்கரவாத குழுக்களைப் போல இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இது மதச்சார்பற்ற பலூச் தேசியவாத அமைப்பாகும்.

பலூசிஸ்தானின் சில பகுதிகளை இந்த ராணுவம் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரமே கிடையாது. அங்கு, இந்த அமைப்பே உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை பார்த்துக் கொள்கிறது. பாகிஸ்தானில் சீனர்களை குறி வைத்து தாக்குவதும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.how balochistan come under pakistan?
கடந்த 2024 ஆம் அண்டு குயிட்டா ரயில் நிலையத்தில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வைத்து பல மக்களை கொன்றனர். கராச்சியில் சீன தூதரகத்தையும் தாக்கியுள்ளனர். கடந்த 1947 ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின் போதே பலூசிஸ்தானில் சுதந்திர வேட்கை தொடங்கி விட்டது. இந்திய விடுதலையின் போது, இந்த பகுதியை கரன், மகரன், லாஸ்பேலா , கலாட் ஆகிய 4 சுதேசிய அரசுகள் ஆட்சி செலுத்தி வந்தன.
மற்ற மூன்று அரசுகளும் பாகிஸ்தானுடன் இணைவதை ஏற்றுக் கொண்டன. ஆனால், கலாட் அரசு, பாகிஸ்தானுடன் இணைய மறுத்துவிட்டது. அப்போது, பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா கலாட் அரசை பாகிஸ்தானுடன் இணைக்க கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையொப்பமிட வைத்தார். அப்போதிருந்தே, பலூசிஸ்தானில் விடுதலைப் போர் தொடங்கிவிட்டது.

விடுதலை அடைந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது மாகாணங்களை மறுசீரமைத்து பலூசிஸ்தானின் சுயாட்சி அதிகாரத்தை குறைத்தது. கடந்த 1958 ஆம் ஆண்டில், கலாட் மன்னர் நவாப் நௌரோஸ் கான் பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக கொரில்லாப் போரை நடத்தினார். ஒரு வருடம் கழித்து, அவர் சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்குவதாக பாகிஸ்தான் உறுதியளித்தது. ஆனால், சரணடைந்தபோது, கான் மற்றும் அவரின் மகன்கள் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். குடும்ப உறுப்பினர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட கான் 1964 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
அதுமுதல் பலூசிஸ்தான் விடுதலை போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. வங்கதேசத்தை பாகிஸ்தானில் இருந்து பிரித்தது போல, பலூசிஸ்தானை பிரித்து கொடுக்க வேண்டுமென்பதுதான் பலூச் விடுதலை அமைப்பின் நோக்கமாகும்.