காலிஸ்தான் தனி நாடு கோரி பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங் தப்பித்து இருந்தால் அது உளவுத்துறையின் தோல்வி என்று பஞ்சாப் உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 21) சாடியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அம்ரித்பால் சிங் என்பவர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த அமைப்பானது பஞ்சாப்பை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்ந்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து அம்ரித் பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் சென்று அஜினாலா காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தினார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அம்ரித்பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தப்பிவிட்டதாக போலீஸ் தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை தேடி வரும் பஞ்சாப் போலீசார், அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் சட்ட ஆலோசகர் இமான் சிங் காரா என்பவர் அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.எஸ்.ஷெகாவத் முன்பு இன்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்” என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, “உங்களிடம் 80,000 போலீசார் இருந்தும் அம்ரித்பால் சிங் இதுவரை கைது செய்யப்படவில்லை, அவர் தப்பித்தால் அது உளவுத்துறையின் தோல்வியாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அம்ரித்பால் சிங்கை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாநில காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
IND vs AUS :சேப்பாக்கம் மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!
நயன்தாராவால் இயக்குநருக்கு சிக்கல்!