தேசிய நெடுஞ்சாலையில் காரால் இடித்ததில் பாட்டி பலியாகி விட, பேத்தி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய போது கோவையில் பிடிபட்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் புரமேரி பகுதியை சேர்ந்தவர் ஷஜீல். இவர் கடந்த 2024 பிப்ரவரி 27 ஆம் தேதி வடகரா பகுதியில் சாலையை கடந்த 68 வயது பெண் பேபி, அவரின் 9 வயது பேத்தி திரிஷன்னா ஆகியோர் மீது காரை ஏற்றி விட்டு தப்பி சென்று விட்டார். இந்த விபத்தில் பேபி இறந்து போனார். திரிஷன்னா இன்னும் வரை கோமாவில்தான் இருக்கிறார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் காரை ஏற்றியவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே, ஷஜீல் காரை பத்திரமாக ஒளித்து வைத்து விட்டு வளைகுடா நாட்டுக்கு போய் விட்டார். போலீசார் கிட்டத்தட்ட 12 மாதங்களாக விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வந்தனர். விபத்து நடந்த 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 19 ஆயிரம் கார்கள், 50 ஆயிரம் டெலிபோன் கால்களை போலீசார் ஆய்வு செய்தனர். 500 ஓர்க்ஷாப்களில் சோதனை மேற்கொண்டனர்.
எனினும், காரை ஏற்றியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஷஜீல் சும்மா இருக்காமல் கடந்த டிசம்பர் மாதத்தில் தனது கார் வடகரா அருகே கோவில் சுற்றுசுவர் மீது மோதி விட்டதாக கூறி இன்சூரன்சுக்கு விண்ணப்பித்துள்ளார். விபத்து நடந்த தேதி, நேரம் போன்றவையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு ஷஜீல் கார் ஏற்றியதில்தான் பேபி பலியானதை உறுதி செய்தனர். அவரை, கைது செய்ய வீட்டுக்கு சென்றால் அவர் அங்கு இல்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி அமீரகத்துக்கு ஷஜீல் தப்பியிருந்தார். தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அமீரகத்தில் இருந்து ஷஜீல் தாய் நாடு திரும்பினார். கேரள விமான நிலையங்கள் வழியாக சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதி, கோவை வந்திறங்கியுள்ளார். இதையடுத்து, அவரை கோவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஷஜீல் வடகரா போலீசாரிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்.