”இந்து மதத்தினர் தங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்” என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பேச்சுகள் மூலம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர். சமீபத்தில்கூட ‘பதான்’ படத்தை எதிர்த்து அவர் தெரிவித்த கருத்து விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் இந்து ஜகாரன வேதிகி என்ற அமைப்பு சார்பில் இன்று (டிசம்பர் 26) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், ”உங்கள் வீடுகளில் (இந்து மதத்தினர்) கூர்மையான ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். எதுவும் இல்லையென்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள். எப்போது, என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தற்காத்துக்கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது.
யாரேனும் அத்துமீறி நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மை தாக்கினால் பதிலடி கொடுப்பது நமது உரிமை. லவ் ஜிகாத், ஜிகாத் செய்யும் பாரம்பரியத்தை அவர்கள் கொண்டுள்ளனர். எதுவும் செய்யாவிட்டால் லவ் ஜிகாத்… அவர்கள் லவ் செய்தாலும் அதிலும் ஜிகாத் செய்கின்றனர்.
நாமும் (இந்து மதத்தினர்) காதல் செய்கிறோம், கடவுளை காதல் செய்கிறோம். ஒரு சன்னியாசி, தனது கடவுளை காதல் செய்கிறான். உங்கள் மகள்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள், சரியான நெறிமுறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை மிஷினெரி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பவேண்டாம். அவ்வாறு அனுப்புவதால் உங்களுக்கு நீங்களே முதியோர் இல்லத்தை திறந்துகொள்கிறீர்கள்” எனப் பேசியிருப்பதால், அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்