கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கனடாவில் டொரான்டோவில் இருந்து 50 கி.மீ தொலைவில் பிராம்ப்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஹிந்து சபா மந்திர் என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், கனடாவிலும் குறிப்பாக சீக்கியர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது.
இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து கோவில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனடா மக்களும் தங்களது மதத்தை பின்பற்ற சுதந்திரம் உண்டு என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கனடா போலீஸ் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா எம்.பி., சந்திரா ஆர்யா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காலிஸ்தான் தீவிரவாதிகள் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டனர். பிராம்டனில் உள்ள ஹிந்து கோவில் வளாகத்திற்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் இடமாக கனடா மாறிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிராம்டன் மேயர் கூறுகையில், கனடாவில் மத சுதந்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். அனைவரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகே நடக்கும் வன்முறைச் செயல்களை தான் கடுமையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
100% இடப்பங்கீடு என்றோ… அன்று தான் உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்
உலகளவில் சாதனை : விஜய் சேதுபதிக்கு குவியும் வாழ்த்து!