ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை!

Published On:

| By christopher

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று (செப்டம்பர் 27) புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியது.

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த 6ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அதனைத்தொடர்ந்து அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசுவதாகவும், அதனை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தை கைவிட மறுப்பு!

இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அக்கட்சிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

‘‘புதுச்சேரியின் அமைதிக்கு எந்தவிதத்திலும் பங்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுவர்.

hindu munnani leads bandh in puducherry

மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவும், திசை திருப்பவும் இதுபோன்ற முழு அடைப்பு போராட்டத்தை ஆளும் தரப்பு இந்து முன்னணி மூலம் அறிவிப்பதாகவே கருதுகிறோம். இந்து முன்னணி போராட்டம் தேவையற்றது.’’ என்று தெரிவிக்கப்பட்டது.

வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முழு அடைப்பு போராட்டத்தை கைவிட புதுச்சேரி வர்த்தக சபையும் வேண்டுகோள் விடுத்தது.

இதனைதொடர்ந்து போராட்டத்தை கைவிடக் கோரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போராட்டத்தை கைவிட இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் மறுத்து விட்டன.

முழு அடைப்புஇயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்நிலையில் திட்டமிட்டப்படி, முழு அடைப்பு போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று நடைபெற இருந்த காலாண்டுத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

hindu munnani leads bandh in puducherry

கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து டெம்போக்களும் ஓடவில்லை.

அதேவேளையில், புதுச்சேரி அரசு பேருந்துகள் பலத்த போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று மாலை 5 மணி வரை நடத்த இருக்கும் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆ.ராசா கோவை வருகை: ரூட் சொல்லி முற்றுகையிட பாஜக அழைப்பு!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel