அதானி குழுமம் சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அதைபற்றி கவலைப்படாமல், அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம், ஆவணங்களை கேட்போம் என்று ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் சவால் விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது அதானி குழுமம். அம்பானியின் நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய வணிகத் துறைகளில் போட்டியாக இன்று அதானி குழுமமும் உள்ளது. இவை அனைத்தும் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே நடந்தேறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து ஆய்வு நடத்தி கடந்த 24ம் தேதி அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பங்குச்சந்தையில் மோசடி செய்த அதானி
அந்த அறிக்கையில் “அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினோம். அதில், ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஏறக்குறைய 12,000 கோடி டாலருக்கு அதிபதியாக உள்ளார். உலகளவில் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் அதானியின் சொத்து மதிப்பு பெரும்பாலும் பங்குகளின் உயர்வால் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டியதாகும்.
இந்த 3 ஆண்டுகளில் அதானிகுழுமத்தின் 7 நிறுவனங்களின் பங்குகளும் 819 சதவீதம் சராசரியாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தது.
அடியோடு சரியும் அதானியின் பங்கு மதிப்பு
அந்த அறிக்கையால் அடியோடு ஆட்டம் கண்டுள்ளது அதானி குழுமத்தின் பங்குகள். அறிக்கை வெளியான நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் மட்டும் ஏறக்குறைய அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 17 சதவீதம் சரிந்தது.
அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களும் பங்குச்சந்தையில் ஒட்டுமொத்தமாக சரிவை சந்தித்துள்ளன. அதன்படி இன்று வரை சுமார் ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கு தொடர்வோம் – அதானி குழுமம்
இதனைத்தொடர்ந்து ”ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதாரபூர்வமற்றது. தங்கள் குழுமத்திற்கு எதிராக திட்டமிட்டு தொடுக்கப்பட்ட சதி. அந்தநிறுவனத்தின் மீது வழக்கு தொடர்வோம்” என்று அதானி குழுமம் மிரட்டல் விடுத்திருந்தது.
சட்டரீதியான மிரட்டல்களை வரவேற்கிறோம்
இதற்கு பதிலடியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாங்கள் அறிக்கை வெளியிட்ட 36மணி நேரத்தில் இதுவரை அதானி குழுமம் உண்மைக்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. அறிக்கையின் முடிவில் நாங்கள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக 88 நேரடி கேள்விகளை அதானி குழுமத்திடம் வைத்திருந்தோம். இதுவரை அந்த கேள்விகளுக்கு அதானி குழுமத்திடம் இருந்து பதில் இல்லை.
அதற்குப் பதிலாக அதானி குழுமத்திடம் இருந்து மிரட்டல்தான் வருகிறது. நாங்கள் 2 ஆண்டுகளாக ஆய்வுசெய்து, 32 ஆயிரம் வார்த்தைகளில் 106 பக்கங்களில், 720 குறிப்புகளில் அளித்த அறிக்கையை ஆய்வு செய்யாமல் வெளியிட்டோம் என அதானி குழுமம் கூறுகிறது.
அமெரி்க்க மற்றும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு எங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என்று அதானி குழுமம் கூறியுள்ளது.
அதானி குழுமம் அளிக்கும் சட்டரீதியான மிரட்டல்களை, நோட்டீஸ்களை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் அறிக்கையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம், எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த சட்டரீதியான நடவடிக்கையும் தோல்விஅடையும்.
அதானி குழுமம் தீவிரமாக இருந்தால், எங்கள் நிறுவனம் செயல்படும் அமெரிக்காவிலும் நாங்கள் வழக்குத் தொடர்வோம். சட்டரீதியான ஆய்வுக்காக அதானி குழுமத்தின் அனைத்துவிதமான ஆவணங்களையும் கோருவோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
காங்கிரஸுடன் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?
”முதல் பந்திலேயே அவுட்!” : மதுரை மாணவியை பாராட்டிய பிரதமர்