சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி கடந்த 28 நாட்களாக இமாச்சல் பிரதேசத்தில் நடந்த அதிரடி தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்து இன்று அங்கு வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளை கைப்பற்றுவதற்காக 412 பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இவர்களில் வெறும் 24 பேர் மட்டுமே பெண்கள் ஆவர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இது மட்டும் அல்லாமால், மொத்தம் 99 வேட்பாளர்கள் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர்.
55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 28 லட்சத்து 54 ஆயிரத்து 945 பேர் ஆண்கள் ஆவர். மேலும். 27 லட்சத்து 37 ஆயிரத்து 845 பேர் பெண் வாக்களர்கள். 1 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள் என்றும் 1136 வாக்காளர்கள் நூறு வயதைக் கடந்தவர்கள் என்றும் தேர்தல் ஆணைய தகவல்கள் கூறுகின்றன.
மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் சேர்த்து 7 ஆயிரத்து 884 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 646 வாக்குச்சாவடிகள் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இமாச்சல் பிரதேசத்தில் பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இந்த பகுதிகளிலும் வாக்குப் பதிவுக்கு தேவையான சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது 75.57 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். அப்போது பா.ஜ.க. 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 2 இடங்களை சுயேச்சைகளும் ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றி இருந்தது.
1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இமாச்சல் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் வரலாற்றில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் வெற்றி பெறும் சம்பவம் இது வரை அரங்கேறவில்லை. பா.ஜ.க.வும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. அதனால் இதே ஃபார்முலாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், வரலாற்றை மாற்றி எழுத ஆளும் பா.ஜ.க. கட்சி கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில நாட்கள் முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, வந்தே பாரத் ரயில் சேவையை இமாச்சலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது மட்டும் அல்லாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரும் மாறி மாறி அங்கு முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டனர்.
பெண்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணியில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு, ஆண்டுக்கு 3 இலவச எல்பிஜி சிலிண்டர்கள், பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி கல்லூரி பெண்களுக்கு ஸ்கூட்டி, கர்ப்பிணிகளுக்கான பேறுகால உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது, பெண்களுக்கான திருமண உதவி தொகையை உயர்த்துவது என குடும்பப் பெண்களை குறிவைத்து ஏராளமான இலவச வாக்குறுதிகளை பா.ஜ.க. அள்ளி வீசியுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இமாச்சல் பிரதேசத்தில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவி தொகை, 300 யூனிட் இலவச மின்சாரம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது என காங்கிரசும் வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை அள்ள வலை வீசி உள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது அந்த கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 8 பேர் வரை சிஎம் பதவிக்கு போட்டி போடுவதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் பதவிக்கு தகுதியான பலபேர் கட்சியில் இருப்பது தங்களுக்கு பலம் தானே தவிர பலவீனம் அல்ல என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கடைசி நேரத்தில் பா.ஜ.க.விற்கு தாவியதும் பா.ஜ.க.வில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத தலைவர்கள் சுயேச்சையாக களம் இறங்கி இருப்பதும் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
தேர்தலில் வெற்றி கொடி நாட்டப் போவது யார் என்பது டிசம்பர் 8-ம் தேதி தெரிந்துவிடும்.
அப்துல் ராஃபிக்
இளமை இதோ இதோ : அழகிகளுடன் ‘ஆண்டவர்’!
கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!