இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து தொகுதிகளுக்குமான முடிவை இரவு 8.40 மணிக்கு தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த 1985 முதல் இமாச்சலில் ஆட்சியில் இருக்கும் எந்த கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. அந்தவகையில் பாஜக ஆட்சியிலிருந்த இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலுக்காகக் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
பிரதமர் மோடி பல்வேறு கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்தார். 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல், 6-12ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்குச் சைக்கிள், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர், மாநிலத்திற்கு புதிய 5 மருத்துவக் கல்லூரிகள் என கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் நட்டா என முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
அதுபோன்று காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மக்களுக்கு வேலையை உருவாக்க முடியாது என்று பாஜக கூறுகிறது.
பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் செய்த நலத்திட்டங்களை ஒப்பிடுகையில் இமாச்சல் பிரதேசத்தில் எதுவும் செய்யவில்லை” என்று பேசினார்.
1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்தார்.
300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது ஆம் ஆத்மி.
இந்நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
68 தொகுதிகள் உள்ள இமாச்சலில் ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவுக்கும் – காங்கிரஸுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு.
அதாவது, காங்கிரஸ் 43.90 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 43 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. இருகட்சிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.90 சதவிகிதம் மட்டுமே.
ஆம் ஆத்மி 1.10%, பகுஜன் சமாஜ்வாதி 0.35%, சிபிஐ 0.01%, நோட்டா 0.59%, மற்றவை 10.39சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளன.
காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் வெற்றி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வெற்றி. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
குஜராத் தேர்தல்: உணர்ச்சிவசப்பட்ட மோடி
மாண்டஸ் : கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சூதானமா இருங்க ஐயாமாருங்களே. குதிரை பேரம் ஆரம்பமாயிரப் போகுது…