பெங்களூருவில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (செப்டம்பர் 4 ) இரவு மட்டும் பெங்களூரில் 131 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனால் சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
கடந்த சில நாட்களாக தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எல்லாம் படகு போல் மிதந்து செல்வதை காண முடிகிறது.

சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு, எச்எஸ்ஆர் லேஅவுட், வர்தூர், ஈகோ ஸ்பேஸ், பெல்லந்தூர், தொட்டகண்ணேலி ஆகிய பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாரத்தஹள்ளி மேம்பாலம் செல்லும் சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால், வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று (செப்டம்பர் 5) காலை அலுவலகம் சென்ற பலர் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அங்கு உள்ள தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்த படியே வேலை செய்ய வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, குண்டும் ,குழியுமாக இருக்கும் சாலைகளில் மழை நீரும் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகர்ப்புற மக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அங்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்