பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 19) மாலை பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சுவர் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகர் முழுவதும் நேற்று மாலை கன மழை பெய்தது. இதனால் பெல்லாந்தூர் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவன கட்டிடங்களில் வெள்ளம் புகுந்தது.
கனமழையின் காரணமாக, பெங்களூரு நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளின் தரைதளங்கள் தண்ணீரில் மூழ்கின.
தரைதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் நீரில் மூழ்கின. அலுவலகம் சென்று வீடு திரும்பியவர்கள் கனமழையின் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனர்.
கன மழையால் மெஜஸ்டிக் பகுதி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் சாலையில் நிறுத்தப்பட்ட நான்கு கார்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, அதிகபட்சமாக ராஜமகால் குட்டகாளி பகுதியில் 59 மிமி மழை பெய்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு பெங்களூருவில் கன மழை காரணமாக, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக பெங்களூரு நகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியது.
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு ஒரு வாரமானது. சாலைகளின் வெள்ள நீரில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை டிராக்டர் மூலம் மீட்டனர்.
இந்தநிலையில் மீண்டும் பெங்களூருவில் கன மழை பெய்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். ##bengalururains என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் ட்ரெண்டானது.
செல்வம்