இதய அறுவை சிகிச்சை முன்னோடி டாக்டர் செரியன் மறைவு… மோடி, ஸ்டாலின் இரங்கல்!

Published On:

| By Selvam

இந்தியாவிலேயே முதல்முறையாக கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணரும் ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“ஜனவரி 25-ஆம் தேதி மாலை பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்தில் அப்பா (செரியன்) கலந்துகொண்டார். அப்போவது அவர் மயங்கி விழுந்ததால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்” என்று செரியனின் மகள் சங்கீதா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

செரியன் உடல் பெங்களூரில் இருந்து நேற்று (ஜனவரி 26) சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக ஜனவரி 31-ஆம் தேதி ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது. பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற்று கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவில் 1942 ஆம் ஆண்டு பிறந்த செரியன், மங்களூரில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் 1964 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் பட்டமும், 1970 ஆம் ஆண்டு எம்எஸ் பட்டமும் பெற்றார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

1975 ஆம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் இந்தியாவின் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செரியன் மேற்கொண்டார். அவர் அறுவை சிகிச்சை செய்தபோது, சிறப்புக் கருவிகள், ஹெட்லைட் போன்ற அதிநவீன உபகரணங்கள் எதுவும் இல்லை.

மேலும், இந்தியாவின் முதல் இதய – நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முதல் குழந்தை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

செரியனின் சிறந்த மருத்துவ சேவைக்காக 1991-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

செரியனின் மறைவுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன்.

இதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது. பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், “டாக்டர் செரியனின் இதய மருத்துவப் பணிகளால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அவர் மருத்துவத் துறையில் பலருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் செரியனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share