35 முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில், எகிப்து, அமெரிக்கா, அரேபிய வளைகுடா நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து 15 ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
23 லட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவு மோசமான இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்பக புற்று நோயை விட 10 மடங்கு அதிக பாதிப்பை இது உண்டாக்குகிறது.
அலுவலக வேலை மற்றும் குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் குறைவான உடல் இயக்கம் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.
சமீபத்திய ஆண்டுகளில், 35 – 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது,
அதே நேரத்தில் ஆண்களின் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
குறிப்பாக இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது.
கரோனரி தமனி நோயால் (Coronary artery disease) பாதிக்கப்பட்ட சுமார் 15,000 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இளம் நோயாளிகளில், பெண்கள் 30 நாட்களுக்குள் இறக்கும் அபாயம் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மெஹ்தி ஓ.கரேல் நபி கூறும்போது,
“இதய நோய் அறிகுறிகளை கண்டறிதல், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வது ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.
அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் பெண்களை மருத்துவமனையில் மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சரியான விழிப்புணர்வு இன்மை மற்றும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாத காரணத்தினாலே அதிக அளவு மாரடைப்புகள் உண்டாகிறது.
கொரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் ஆண்களை விட பெண்களுக்கு மோசமான இதய நோய்கள் ஏற்படுவதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகரித்திருப்பது இளம் தலைமுறையிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி: மீண்டும் ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைப்பு!
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்: தலைமை நீதிபதியிடம் முறையிட அறிவுறுத்தல்!