சாமியாரின் கூட்டத்தில் பறிபோன 121 உயிர்கள்…யார் இந்த போலே பாபா? கூட்டத்தில் என்ன நடந்தது?

இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரின் ஆன்மீக பிரசங்கக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு மக்கள் இறந்தது குறித்து அந்த சாமியாரிடமிருந்து இதுவரை எந்த வருத்தமும், விளக்கமும் வெளிவரவில்லை. மேலும் அவர் இப்போது தலைமறைவாகி இருக்கிறார். யார் அந்த சாமியர் போலே பாபா? எப்படி இவ்வளவு மக்கள் உயிரிழந்தனர் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

யார் இந்த போலே பாபா?

போலே பாபா அல்லது நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அந்த சாமியாரின் உண்மையான பெயர் சூரஜ்பால் என்பதாகும். இவர் உத்திரப் பிரதேசத்தில் காவல்துறை உளவுப் பிரிவில் 15 ஆண்டுகள் கான்ஸ்டேபிளாக வேலை செய்தவர். 1997 ஆம் ஆண்டு இவர் பணிக் காலத்திலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் என்று என்.டி.டி.வி குறிப்பிட்டுள்ளது. இதே குற்றச்சாட்டிற்காக இவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு சூரஜ்பால் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆன்மீகப் பணி செய்யப் போவதாகச் சொல்லி சிறிய அளவில் ஆன்மீக பிரசங்கக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்.

ஆக்ரா மற்றும் அலிகார் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று ஆன்மீகப் பிரசங்கங்களை செய்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக சூரஜ்பால் வளர ஆரம்பித்தார். அவரது ஆன்மீகக் கூட்டங்களில் கூட்டம் திரள ஆரம்பித்தது. சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த சூரஜ்பால் அதிகாரம் மிக்க போலே பாபாவாக உருவெடுத்தார். அதன்பிறகு தனது நடை, உடை, தோரணை என அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.

கோட்டு சூட்டு போட்ட சாமியார்

பெரும்பாலும் சாமியார் என்றால் தாடி வைத்திருப்பார்கள், காவி உடை அணிந்திருப்பார்கள் என்பதற்கு மாறாக போலே பாபா எப்போதும் முழுமையாக ஷேவ் செய்த முகத்துடனேயே இருப்பார். வெள்ளை நிறத்தில் கோட்டு சூட்டு, டை, சன் கிளாஸ் என்று டிரெண்டிங்காக வலம்வந்து அரியணையில் அமர்ந்து கொண்டு பிரசங்கம் செய்வார். இவரை பின்பற்றுபவர்களில் பெண்களே அதிகம். போலே பாபா திருமணமானவர். பிரசங்கக் கூட்டங்களில் அவரது மனைவியும் உடன் அமர்ந்திருப்பார். போலே பாபாவை பின்பற்றுபவர்கள் அவரது மனைவியை மாதாஸ்ரீ என்று அழைப்பார்கள்.

முதலில் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் வெகுவாக இருந்த அவரது செல்வாக்கு, பின்னர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் வளர ஆரம்பித்தது. பாபாவின் கூட்டங்களில் அவரது ஆட்கள் பிங்க் நிறத்தில் சட்டையும், வெள்ளை நிற தொப்பியும் அணிந்து, கையில் கம்புடன் வலம் வருவர். இவர்களுக்கு நாராயணி சேனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரசங்கக் கூட்டங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்பவர்கள் இவர்கள்தான்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட ஊரடங்கு விதிகளை மீறி பிரசங்கக் கூட்டங்களை போலே பாபா நடத்தினார். 2022 மே மாதத்தின் போது 50 பேர் கலந்து கொள்வார்கள் என்று சொல்லி கூட்டத்திற்கு அனுமதி பெற்று 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தினை நடத்தினார். அவரது கூட்டங்களில் விதி மீறல் என்பது சாதாரணம் என்கிறார்கள் லோக்கல் பத்திரிக்கையாளர்கள்.

மீடியா வெளிச்சம் இல்லாத போலே பாபா

அவரது ஆசிரமம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கார்களில் ஊர்வலமாக பயணிப்பதை வழக்கமாகக் கொண்ட போலே பாபா, பொதுவாக மீடியாக்களை சந்திப்பதில்லை. சமூக வலைதளங்களிலும் அவர் அவ்வளவு பிரபலமில்லை. ஆனால் லட்சக்கணக்கான மக்கள் போலே பாபாவின் ஆன்மீக பிரசங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். உத்திரப் பிரதேசத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களிடையே போலே பாபா பிரபலமானவர்.

இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்ட கூட்டம்

தற்போது ஜூலை 2 அன்று உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற பிரசங்கக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். சுமார் 80,000 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அரசு நிர்வாகத்திடம் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தினை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.

காலடி மண்ணை எடுக்க ஓடிய மக்கள்

பிரசங்கம் நடக்கும் இடத்திற்கு 12:30 மணிக்கு போலே பாபா வந்திருக்கிறார். ஒரு மணி நேரம் பிரசங்கம் நடைபெற்றுள்ளது. 1:40 மணியளவில் அவர் சாலையை நோக்கி புறப்பட்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காகவும், அவரது பாதத்தினை தொடுவதற்காகவும், அவரது காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வதற்காகவும் மக்கள் ஓடியிருக்கிறார்கள். போலே பாபாவின் பாதுகாவலர்கள் கூட்டம் அவரை நெருங்காமல் தடுக்க கூட்டத்தினை தள்ளியிருக்கிறார்கள். ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நெரிசல் அதிகரித்துள்ளது.

 

இப்படி போலே பாபாவின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்கள் போட்டி போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரது கால் பாத மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் அவரது ஆசீர்வாதம் கிடைத்ததற்கு சமம் என்பதாகவும், அந்த காலடி மண்ணை வீட்டில் குழந்தைகளுக்கு திருநீறாக இட்டால் அவர்கள் நோய்நொடி இல்லாமல் இருப்பர் என்று அவரை பின்பற்றும் மக்கள் நம்புகிறார்கள். இதனால் அவர் நடந்து சென்ற வழியில் மக்கள் ஓடியபோது நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மழை பெய்து மண் ஈரமாக இருந்ததால், நெரிசலில் கீழே விழுந்தவர்களால் எழுந்திருக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் பாபாவின் கூட்டங்களில் அவரது பாதம் மற்றும் உடலைக் கழுவும் நீரை பிடிப்பதிலும் அவரது ஆதரவாளர்களிடையே போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மருத்துவர்களும், ஆக்சிஜன் வசதியும் இல்லாத மருத்துவமனைகள்

கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் பல மருத்துவமனைகளில் வெளியே கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனைச் சுற்றி இறந்தவர்களின் குடும்பத்தினர் அழும் காட்சிகள் நாட்டையே உலுக்கி வருகிறது. இவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள், ஆனால் ஒரு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார் என்றும், ஆக்சிஜன் வசதி எதுவும் இல்லை என்றும், இன்னும் உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அங்கு மருத்துவமனையில் இல்லை என்றும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

எட்டா, ஹத்ராஸ், அலிகார் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு இறந்தவர்களின் உடல்களையும், சிகிச்சைக்கு போராடுபவர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனைகளின் பிணவறைகள் நிறையும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச அரசு சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

”உத்திரப் பிரதேச பாஜக அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து நடந்த உடனே வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும் மருத்துவமனைகளுக்கு சென்ற பிறகும் மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உதவிகள் உடனே கிடைக்கவில்லை. இவற்றை ஏற்பாடு செய்திருந்தால் நிறைய உயிரை காப்பாற்றியிருக்க முடியும். பாஜக அரசின் நடவடிக்கையின்மையே இதற்கு காரணம்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையின் எஃப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் இல்லை என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உத்திரப் பிரதேசத்தில் மாறியிருக்கிறது. இந்த கோர சம்பவம் குறித்து இன்னும் நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் ராஜினாமா!

கோவை திமுக மேயர் கல்பனா ராஜினாமா! அடுத்த மேயர் யார்?

அமைச்சர் அனிதாவுக்கு எதிரான ED மனு தள்ளுபடி! நிம்மதியில் அமைச்சர்கள்… அப்பீலுக்கு தயாராகும்  ED

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
5

1 thought on “சாமியாரின் கூட்டத்தில் பறிபோன 121 உயிர்கள்…யார் இந்த போலே பாபா? கூட்டத்தில் என்ன நடந்தது?

  1. தமிழ்நாட்டுல சட்டம், ஒழுங்கு சரியில்ல, அரசு மருத்துவமனைகள் நிர்வாகம் சரியில்லனு பொங்குறவைங்க எல்லாம் எங்கய்யா போனாய்ங்க?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *