இரவிலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!

Published On:

| By Kavi

Haryana police fires tear shells on farmers at Night

டெல்லி நோக்கி பேரணி செல்லும் விவசாயிகள் மீது இரவிலும் போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசியுள்ளனர். இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 14) விவசாயிகள் தங்களது பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த கிசான் மோர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்சா ஆகிய இரண்டு அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்தன.

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விவசாயிகள் தங்களது பேரணியைத் தொடங்கினர்.

ஆறு மாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் டெல்லி நோக்கிப் புறப்பட்டனர்.

இந்த சூழலில், பஞ்சாப் ஹரியானா எல்லையில் போலீசார் கடுமையான தடுப்புகளை அமைத்து விவசாயிகளைத் தடுக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

விவசாயிகள் டெல்லி வருவதை தடுக்க போலீசாரும் துணை ராணுவத்தினரும் டெல்லி எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்

போலீசாரின் தடுப்பையும் மீறி சென்ற விவசாயிகள் மீது நேற்று டெல்லி ஹரியானா எல்லையான சம்பு பகுதியில் போலீசார் ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரின் செயலால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போலீசாரின் பேரிகார்டு மற்றும் கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர் மூலம் இடித்து தள்ளினர். சம்பு பகுதியில் பாலத்தின் மேலே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளையும் கீழே தூக்கி வீசி கோஷங்களை எழுப்பினர்.

ஹரியானா மாநிலம் அம்பலாவில் அதிவிரைவு படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, விவசாயிகள் நடத்திய தாக்குதலில் அதிவிரைவு படையினர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசாரின் கடுமையான தடுப்பை மீறியும் டெல்லிக்குள் நுழைவோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் புதிதாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, ஏற்கனவே நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசால் உறுதியளிக்கப்பட்ட விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தான் கேட்கிறோம்” என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

போலீசாரின் கடுமையான தடுப்புகளையும் மீறி விவசாயிகள் நள்ளிரவு முதல் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.

அந்தவகையில் டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது பஞ்சாப் ஹரியானா எல்லையில் இரவிலும் போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் எங்களது பேரணி தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளதால் விடிய விடியத் தடுப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

திக்ரி எல்லையில் உள்ள கான்கிரீட் அடுக்குகளுக்கு இடையே அதிக கான்கிரீட் கலவைகள் ஊற்றப்பட்டு வருகிறது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பிரெட் கட்லெட்!

பைக்கின் விலை ரூ.30,000… அபராதம் ரூ.3.2 லட்சம்: போலீஸாரை அதிரவைத்த வாகன ஓட்டி!

வேலைவாய்ப்பு : இஸ்ரோவில் பணி!

ஹெல்த் டிப்ஸ்: கடுக்காய் பொடி சாப்பிட்டால் முதுமைத்தோற்றம் விலகுமா..?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel