இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் “anti-India” conference என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது.
பிப்ரவரி 5ஆம் தேதியை பாகிஸ்தான் ஒற்றுமை தினமாக அந்த நாடு கடைபிடிக்கிறது. இதை முன்னிட்டு நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தின் ரவலாகோட் என்ற நகரத்தில் தீவிரவாதிகள் மாநாடு நடைபெற்றது.
நேற்று அங்குள்ள ஸ்டேடியத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்க காசாவில் இருந்து ஹமாஸ் தலைவர் காலித் அல் குவாதமி தலைமையில் பலர் வந்திருந்தனர். இது நாள் வரை மத்திய தரைக்கடலில் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்த ஹமாஸ் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இந்தியாவுக்கு ஆபத்தானதாகவே பார்க்கப்படுகிறது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஹமாசுடன் கைகோர்த்து இருப்பதையும் கணிக்க முடிகிறது. முன்னதாக, ஹமாஸின் பல தலைவர்கள் காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக பேசியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்க விலையுயர்ந்த கார்களில் வந்த ஹமாஸ் தலைவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது தரப்பில் பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.ஹமாஸ் தலைவர்கள் பாலஸ்தீன கொடியுடன் அங்கு நடந்த ஊர்வலத்திலும் பங்கேற்றனர். அதே போல, ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் மாநாட்டில் ஹமாஸ் தலைவர்கள் பங்கேற்றது இதுவே முதன்முறை. இந்த மாநாட்டில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் தல்கா சைஃப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் ஹமாசுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் எக்ஸ் தளத்தில் பல வீடியோக்கள் பரவி வருகிறது.
சமீபத்தில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் போர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதையடுத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் அமைதி நிலவுகிறது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் மாநாட்டில் ஹமாஸ் தலைவர்கள் பங்கேற்றதை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.