ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று (ஜூலை 31) கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களை குறிவைத்து இஸ்ரேல் கடந்த பல மாதங்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு இதுவரை பச்சிளம் குழந்தைகள் உட்பட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே சென்றிருந்தார்.
தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த இல்லத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்மாயில் இன்று அதிகாலை கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது.
யார் இந்த இஸ்மாயில் ஹனியே?
62 வயதான இஸ்மாயில் ஹனியே காசா நகருக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர். அவர் 1980 களின் பிற்பகுதியில் ஹமாஸில் சேர்ந்தார்.
ஹமாஸின் நிறுவனர் மற்றும் ஆன்மீகத் தலைவரான ஷேக் அஹ்மத் யாசினின் நெருங்கிய கூட்டாளியாக உயர்ந்தார்.
1980கள் மற்றும் 1990களில், ஹனியே இஸ்ரேலிய சிறைகளில் பல தண்டனைகளை அனுபவித்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு சார்பில் பாலஸ்தீனத்தின் பிரதமரானார். எனினும் 2007ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதனையடுத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2017 இல், அவர் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அமெரிக்காவால் “சர்வதேச பயங்கரவாதி” என்று இஸ்மாயில் பெயரிடப்பட்டார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில், போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பின் சார்பாக இஸ்மாயில் பங்கேற்று வந்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதலில் ஹனியாவின் மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsSL : சூப்பர் ஓவரில் இந்தியா அபார வெற்றி.. இலங்கை மோசமான சாதனை!