இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 35 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது சில மாதங்களுக்கு பிறகு மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்-கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு நேற்று தெரிவித்தது.
சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ள இந்த அமைப்பு, காசாவில் இருந்து ஏவுகணையை வீசியதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எந்த சைரன்களும் ஒலிக்காத நிலையில், நேற்று மீண்டும் ஒலித்ததால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரங்கள் தெரியவரவில்லை. ஆனால் பலருக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தசூழலில் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீன நகரான ரஃபா மீது நேற்றிரவு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
போரால் வீடுகளை இழந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த ரஃபாவில் உள்ள டெண்ட் கேம்ப்பில் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர் என்று பாலஸ்தீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
“துல்லியமான ஆயுதங்களை” பயன்படுத்தி ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
இதனால் மீண்டும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேல் தலைவர்களான பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராகவும், ஹமாஸ் தலைவர்களான யாஹ்யா சின்வார், முகமது தியாப் இப்ராஹிம் அல் ஆகியோருக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இஸ்ரேல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கரீம் கான் வலியுறுத்திய நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாம்பன் பாலம் வழியாக கப்பல்கள் செல்ல தடை: என்ன காரணம்?
பியூட்டி டிப்ஸ்: மேக் அப்பை கலைக்க… மெனக்கெட வேண்டாமே!