ஹல்த்வானி வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து இதுவரை 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் உறுதி செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் பன்புல்புர காவல் நிலையத்திற்கு அருகே இருந்த மதரஸா ஒன்று, சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 8ஆம் தேதி புல்டோசர் கொண்டு இடித்தனர்.
இதற்கு அங்குள்ள இஸ்லாமிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு எதிராக கலவரம் வெடித்தது.
அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதோடு அங்கிருந்த போலீஸ் வாகனங்கள் மற்றும் டிரான்ஸ்பர்மருக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் ஹல்த்வானி நகரமே போர்களமாக மாறியது.
கலவரத்தை அடுத்து ஹல்த்வானி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலவரக்காரர்களை பார்த்தவுடன் சுட உத்தரவிட்டார்.
அதன்படி ஹல்த்வானியில் சுமார் 1,200 பாதுகாப்பு வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கலவரத்தில் காயமடைந்த போலீசார் உட்பட சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹல்த்வானியில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3வது நாளாக இன்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவிலும் தளர்வு இல்லை. வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஹல்த்வானி நகரின் முழுப் பகுதியும் 5 சூப்பர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 7 மாஜிஸ்திரேட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எஸ்எஸ்பி நைனிடால் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஹல்த்வானி கலவரம் தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதுவரை 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’வீரர்களின் விசுவாசத்தை பெறுவது எப்படி?’ : தோனி அளித்த ஆச்சரிய பதில்!
உதயநிதி, சபரீசன் ஆசி பெற்ற மாநாட்டுக்கு போலீஸ் தடை! கொங்கு ரியல் நிலவரம்!