அதிகரிக்கும் கொரோனா – எச்3என்2 காய்ச்சல்: வேறுபாடுகள் என்னென்ன?

இந்தியா

சீனாவில் 2019ல் பரவத் தொடங்கி, ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது. எண்டெமிக் (வருடம் முழுவதும் பரவும் தொற்று நோய்), பாண்டெமிக் (சர்வதேச பரவல்) என மக்களை அச்சுறுத்தியது. 

எத்தனை விதிமுறைகள், எத்தனை கட்டுப்பாடுகள், பொருளாதார சரிவு, வேலையிழப்பு, திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் என மக்களை வாட்டி வைதைத்தது கொரோனா. 

உலகம் முழுவதும் கொரோனாவால் 68 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  4,46,89,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில்  1.19 சதவிகிதம் அதாவது 5,30,780 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதிய ஆட்டத்தை தொடங்குகிறதா?

இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 3,406ஆக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த பாதிப்பு 35,56,896ஆக இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் 200க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 38,049 பேர்  கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரித்திருப்பதாக  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியுள்ளார். 

உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை ‘இது ஒரு தொற்றுநோய்’ என   இதே மார்ச் 11ஆம் தேதி 2020ஆம் ஆண்டு அறிவித்தது. மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்னும் பரவல் மட்டும் முழுவதுமாக குறையாமல் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. 

இந்தசூழலில் கொரோனாவோடு தற்போது எச்3என்2  என்ற இன்ப்ளூயன்சா காய்ச்சலும் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக இந்த காய்ச்சலால் ஹரியானாவில் ஒருவரும், கர்நாடாகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இரு நோய்களுக்கும் ஒரு சில வேறுபாடுகளை தவிர ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரு நோய்களுக்குமான வித்தியாசம் என்ன?

எச்3என்2 காய்ச்சலுக்கும்  இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா வைரஸின் அறிகுறிகளே இருந்தாலும் அவை வைரஸ் குடும்பங்களின் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை ஆகும். கொரோனா சார்ஸ் வகை குடும்பத்தை சார்ந்தது. எச்3என்2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் துணை வகை ஆகும்.

‘காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகிய  அறிகுறிகள் இரண்டு நோய்களுக்கும் பொதுவானவை என்றாலும் இன்ஃப்ளூயன்ஸாவை விட கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும்.  அதுபோன்று தலைவலி, தசை வலி அறிகுறிகள் இரண்டு நோய்களுக்கும் பொதுவானவை என்றாலும் கொரோனா பாதிக்கும் போது சோர்வு தன்மை அதிகமாக இருக்கும். 

இவை தவிர மூக்கு அடைப்பு, தும்மல், தொண்டை வலி, வாசனை இழப்பு ஆகியவை இரண்டு வைரஸ் தொற்றுகளிலும் காணப்படுகிறது. காதுவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவையும் கோவிட் மற்றும் ஹெ3என்2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும்.

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் ஆகிய இரண்டிலுமே நோயின் தீவிரம் மிகவும் லேசானது முதல் மிகக் கடுமையானதாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

கொரோனா நோய் உடலில் பாதித்திருப்பது 1-14 நாட்களில் தெரியவரும் என்றால் இன்ப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் 1-4 நாட்களில் தெரியவரும். 

எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நாசி பரிசோதனை செய்து இரண்டில் எந்த வகை வைரஸ் என கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமடைய முடியும். காய்ச்சல் பாதிப்புகள் இருப்பவர்கள்  அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என  மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

அதுபோன்று உடலில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பதோடு காய்ச்சலுக்கான சரியான நேரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிகே பிர்லா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் குல்தீப் குமார் குரோவர் தெரிவித்துள்ளார்.. 

கோவிட் தொற்றில் இருந்து கற்றுக்கொண்டவை!

“வைரஸ் தொற்றுகள், எப்போது எங்கு வேண்டுமானாலும் உருமாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.  மனிதர்களாகிய நாம் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்” என அமெரிக்காவின்  விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழக வைரஸ் ஆராய்ச்சியாளரான  தாமஸ் ஃபிரெட்ரிக் அறிவுறுத்தியுள்ளார்.

முறையாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சானிட்டைசர் பயன்படுத்துதல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்தல் என ஏற்கனவே நாம் பின்பற்றிய வழிமுறைகளை காய்ச்சல் சமயத்தில் பின்பற்றினால் ஹெச்3என்2 மற்றும்  தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: சலசலப்பு…கசப்பு: ஸ்டாலின் கூட்டிய திடீர் கூட்டணிக் கூட்டம்! 

“ஸ்டாலின் உழைப்பிற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் முதல்வர் பதவி”: ரஜினிகாந்த்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *