டெல்லியில் 15 நாட்களில் 10 கிலோ எடை குறைத்த ஜிம் டிரெயினருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த அந்த 30 வயதான ஜிம் டிரெயினர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு 15 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்த நிலையில், திடீரென அவரது வலதுகால் செயல் இழந்தது.
இதையடுத்து, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிக விரைவாக எடையை குறைத்தது slimmer’s paralysis என்று சொல்லப்படும் இந்த நிலைக்கு அவரை தள்ளியதாக கூறப்படுகிறது.
எனினும், பக்கவாதம் ஏற்படுவதற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜிம் டிரெயினருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர். நிதிஷ் ஜெகதீஷ் கூறுகையில், ”இது மிகவும் அரிதானது. உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மில் வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபடுவது இடுப்பு வலி, தோள் வலி , முதுகுவலி மற்றும் கழுத்து வலி போன்றவற்றுக்கு வழி வகுக்கும்.
ஜிம்மிற்குச் செல்வோர் முறையான பயிற்சியை பயிற்சி அளிப்பவர்களின் கீழ் பெற வேண்டும். உடலுக்கு சரிவிகித உணவைப் போலவே, உங்கள் உடற்பயிற்சியும் சீரானதாக இருக்க வேண்டும்.
திடீரென ஒரே நாளில் 200 கிலோ தூக்க முடியாது. முதலில் முறையான பயிற்சியாளரை அணுகி உங்கள் உடல் எடை, உயரம், அடிப்படை உடல் வலிமை , இதய செயல்பாடு, தசையின் வலிமை ஆகியவற்றை கணித்து அதற்கு பிறகே பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதே போல, திடீரென ஒரே நாளில் மாரத்தான் ஓடக்கூடாது. அது உங்கள் முழங்கால்களையும் கணுக்கால்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் ஆர்தோ டாக்டர் ராஜு வைஷ்யா கூறுகையில், ”உடலில் கொழுப்பு குறைந்த நிலையில், உடல் ஆற்றல் பெற தசை இழப்பை ஏற்படுத்தும். இந்த பலவீனம் உடல் நலன் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கும் .
விரைவான எடை இழப்புக்காக கட்டுப்பாடான உணவு கடைபிடிப்பார்கள். இதனால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக பி12 போன்ற வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் குறைந்தால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், முடி உதிர்தல் போன்றவை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும்” என்கிறார்.