உலகில் பணக்கார நாய் ஒன்று இத்தாலியில் வாழ்ந்து வருகிறது. அதன் பெயர் ஆறாம் குந்தர். கடந்த 1992 ஆம் ஆண்டு நான்காம் குந்தர் என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் ரக வளர்ப்பு நாயை கவுன்டஸ் கார்லெட்டா லெபன்ஸடைன் என்ற கோடீஸ்வர பெண் வளர்த்து வந்தார்.
டஸ்கானி நகரில் வசித்த அவர் இறக்கும் போது, தனக்கு சொந்தமான 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை நான்காம் குந்தருக்கு எழுதி வைத்தார். இந்த பெண்ணுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவரும் இறந்து போனதால், தான் பாசமாக வளர்த்த குந்தருக்கு சொத்துக்களை எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. அதில், இருந்து குந்தர் வம்சாவளி நாய்கள் அந்த சொத்துக்களை அனுபவித்து வருகின்றன. அந்த வகையில், இப்போது ஆறாம் குந்தர் அந்த சொத்துக்களை அனுபவித்து வருகிறது. தற்போது, ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு 400 மில்லியன் அமெரிக்க டாவலர்களாக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 3,356 கோடி ஆகும்.
பிரமாண்ட மாளிகையில் சொகுசாக வாழ்ந்து வரும் ஆறாம் குந்தருக்கு தனி சமையல்காரர் , தனி கார், படுக்கை அறை எல்லாம் உண்டு. அதன் விருப்பங்களை பார்த்து பார்த்து நிறைவேற்ற ராணுவ அதிகாரிகளும் உண்டு. இத்தாலிய தொழிலதிபரும் குந்தர் குழும தலைமை செயல் அதிகாரியுமான மவுரிசியோ மியான், அதன் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். குந்தர் பற்றி நெட்பிளிக்ஸ் தனி குறும்படம் ஒன்றை எடுத்துள்ளது. அதன் பெயர் ‘குந்தர்ஸ் மில்லியன்ஸ் ‘என்பதாகும்.
இந்த நாயின் பெயரில் மியாமியில் பிரபல பாப் பாடகி மடேனாவிடத்தில் இருந்து பிரமாண்ட மாளிகை 7.5 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. பின்னர், 29 மில்லியன் டாலருக்கு அந்த மாளிகை விற்கப்பட்டது. இப்படிதான் ஆறாம் குந்தரின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சில விளையாட்டு அணிகள், இசைக்குழுக்களும் குந்தருக்கு சொந்தமாக உண்டு. குந்தரை பராமரிக்க மொத்தம் 27 பேர் பணியில் உள்ளனர். சொந்தமாக கப்பலும் வைத்துள்ளது. அதில், உலகம் முழுக்க பயணிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்