குஜராத்தில் நேற்று (அக்டோபர் 30) மாலை கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் முன்னாள் பாஜக எம்.பி மோகன் குந்தாரியாவின் குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றுக்கு நேற்று சென்றனர்.
அங்கு ஆற்றுக்கு மேல் உள்ள கேபிள் பாலத்தில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தைப் பயன்படுத்திய நிலையில் எதிர்பாராத விதமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்தது.

பலி எண்ணிக்கை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 79 பேரில் 60 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்.பி குடும்ப உறுப்பினர்கள்
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் ராஜ்கோட் எம்.பி.மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துயர நிகழ்வு குறித்து அவர் ”இந்தியா டுடே” தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”நேற்று நடைபெற்ற விபத்தில் நான் எனது குடும்பத்தினர் 5 குழந்தைகள் உட்பட 12 பேரை இழந்துள்ளேன்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் விபத்தில் உயிர்பிழைத்த அனைவரையும் மீட்டுள்ளனர்.
மச்சு ஆற்றில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மீட்பு படகுகளும் சம்பவ இடத்தில் இருக்கின்றன.
பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அதிகமான அளவில் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
அனுமதி எப்படி வழங்கப்பட்டது.
இந்த பாலத்தைத் திறப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.
விசாரணைக் குழு
பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மாநில அரசு 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது என்று குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறியுள்ளார்.
மோனிஷா
குஜராத் பாலம் அறுந்து விழுந்த சிசிடிவி காட்சி!
கோவையில் அண்ணாமலை : நிகழ்ச்சியில் பங்கேற்காத முக்கிய நிர்வாகிகள்!