குஜராத்தில் நேற்று மாலை (அக்டோபர் 30) கேபிள் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 140ஐ தாண்டி உள்ளது.
பூஜையை முன்னிட்டு குவிந்த மக்கள்!
வட இந்தியாவில் தீபாவளிக்கு பின் 6 நாட்கள் கழித்து சத் பூஜை நடைபெறும். இது தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கை போல நீரை மையப்படுத்திய பூஜை. இதற்காக பரகிரிதி அம்மனை வணங்கி நீரை மையமாக கொண்டு பல்வேறு முறைகளில் பூஜைகளை செய்வார்கள்.
இந்நிலையில் குஜராத்தில் உள்ள மச்சு ஆற்றில் சாத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று மோர்பி பகுதிக்கு குடும்பத்துடன் வந்தனர்.
இதற்காக அங்குள்ள நூற்றாண்டு பழமையான கேபிள் பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நேற்று மாலை 6.30 மணியளவில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அந்த பாலத்தை பயன்படுத்திய நிலையில் எதிர்பாராத விதமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்தது.
பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!
இதனால் ஆற்றில் மூழ்கி இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 79 பேரில் குறைந்தது 60 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மோர்பி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இதனால் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இரவு முழுக்க மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில், அதிகாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து கூடுதல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
5 நாட்களில் சரிந்த பழமையான பாலம்!
குஜராத் மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கேபிள் பாலம். 1879ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 230 மீட்டர் நீளம் கொண்டது. அகமதாபாத்தில் இருந்து 200 கிமீ தூரத்தில் மோர்பி பகுதியில் இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.
மச்சு ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 7 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு வந்தது.
கடந்த அக்டோபர் 26ம் தேதிதான் (குஜராத்தி புத்தாண்டு தினம்) இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது.
பாலத்தை புதுப்பித்த பின் அதற்கான பிட்னஸ் சர்டிபிகேட் கையெழுத்தை வாங்காமல் பாலத்தை மக்களுக்கு திறந்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
நிவாரணம் மற்றும் விசாரணை!
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, 5 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை குஜராத் அரசு நியமித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உக்ரைனுக்கு ஆதரவாக புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் வாசகம்!
அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை : திமுக!