குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம், நேற்று (அக்டோபர் 30) திடீரென அறுந்து விழுந்தது. இதில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக அப்பாலத்தில் சென்ற 500க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கோட் சரக ஐ.ஜி அஷோக் யாதவ், “இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்