குஜராத் மோர்பி பால விபத்தில், ஒரேவா குழுமத்தின் 4 பேரை, வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திடீரென அறுந்து விழுந்தது.
இதில் சத் பூஜையை முன்னிட்டு வழிபடுவதற்காக அப்பாலத்தில் சென்ற 500க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 141 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
170 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக பாலத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் பெற்ற ஒரேவா குழுமத்தின் 9 பேர் அம்மாநில காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அதில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மோர்பி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மற்ற 5 பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர். குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பான வழக்கு நேற்று, மோர்பி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எம்.ஜே.கான் முன்பு ஆஜராகிய ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக், ”இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வு நடைபெற்றது கடவுளின் விருப்பம்” எனத் தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.ஜாலா ஆஜராகி, “மோர்பி தொங்கு பாலம் துருப்பிடித்து இருந்தது. அப்பாலத்தின் கேபிள் பழுதுபார்க்கப்பட்டிருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது.
பாலம் கேபிள்களால் தாங்கியிருந்தது.
கேபிளில் எண்ணெய் அல்லது கிரீஸ் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் கேபிள் துருப்பிடித்து இருந்தது. கேபிளை சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.
இந்த பாலம் பராமரிப்பின்போது, என்ன பணிகள் செய்யப்பட்டன, அதற்கான ஆவணங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேலும் அப்பணிகள் பராமரிப்புக்கு வாங்கப்பட்ட பொருள்கள், அதன் தரம் சரிபார்க்கப்பட்டதா போன்றவையும் விசாரணை செய்யப்பட உள்ளது.
இப்பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களான பிரகாஷ் பர்மர் மற்றும் தேவாங் பர்மர் ஆகிய இருவரும் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் அல்ல. அதேசமயத்தில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிர் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இது ஒரேவா நிறுவனத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மேலும், அனுமதிக்கக்கூடிய திறனை நிர்ணயிக்காமல், அரசாங்க அனுமதியின்றி, அக்டோபர் 26 அன்று பாலம் திறக்கப்பட்டது” என்று பி.ஏ.ஜாலா தெரிவித்தார்.
ஒப்பந்ததாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கே.ராவல், ”தனது வாடிக்கையாளர்கள் வெல்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
பாலத்தின் கட்டுமான தகுதிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழுதுபார்க்கும் பணியுடன் தொடர்புடையவர்கள் அல்ல” என்று ராவல் குறிப்பிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் உள்ள கேபிள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
இதன்காரணமாகவே சுமை தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. பாலம் சீரமைக்கும் பணி இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரு நிறுவனங்களும் இந்தப் பணியை மேற்கொள்ள தகுதியற்றவை. எனவே இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விசாரிக்க அனுமதி வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை கேட்ட தலைமை நீதிபதி எம்.ஜே.கான், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதுடன், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள் மற்றும் 2 சப் காண்ட்ராக்டர்களை வரும் நவம்பர் 5ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
அமைச்சர்கள் Vs எம்.எல்.ஏ.க்கள்: சபரீசன் நடத்திய விசாரணை!
அரசியல் கோமாளி அண்ணாமலை: அமைச்சர் மனோ தங்கராஜ்