குஜராத் கூட்டு பாலியல் கைதிகளுக்கு விடுதலை குறித்த மறுஆய்வுக் குழுவில் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த மத கலவரம் நாட்டிலேயே மிக மோசமான கலவரமாக கருதப்பட்டது. இந்த கலவரம் 1000-க்கும் மேற்பட்டவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தது. அப்போது குஜராத்தின் முதல்வராக, நரேந்திர மோடி பதவியில் இருந்தார்.
அந்த கலவரத்தின் போது கர்ப்பிணி முஸ்லீம் பெண் கூட்டு பாலியல் செய்ததற்காக 11 பேருக்கு 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

தற்போது 76 ஆவது சுதந்திர தினக் கொண்டாடத்தை முன்னிட்டு அவர்கள் 11 பேரும் குஜராத் பஞ்சமஹால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் சிறையில் இருக்கும் காலத்தையும், அவர்களின் நடத்தையையும் கருத்தில் கொண்டு மாவட்ட சிறை ஆலோசனைக் குழு விடுதலைக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையில், 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கு சட்டம் அனுமதிக்கிறது. இவர்கள் 11 பேரும் 15 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். எனவே அவர்கள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை குழு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, “குஜராத்தில் கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேருக்கு விடுதலை வழங்கியதில் இன்னொரு உண்மை இருக்கிறது.
மாவட்ட சிறை ஆலோசனைக் குழுவில் சி.கே. ராவோல்ஜி மற்றும் சுமன் சவுகான் ஆகிய இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். மற்றொரு உறுப்பினர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக இருந்த முரளி முல்சந்தனி. இதுதான் குற்றவியல் நிபுணர்களின் நடுநிலையான, பாரபட்சமற்ற குழுவா? இந்த குழுவுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
காங்கிரஸ் தலைவராக 101% எனக்குதான் வாய்ப்பு : ப.சிதம்பரம்