குஜராத் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இரண்டு போலீசார் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார், பெரியவர்களுக்கான விளையாட்டு மையம் செயல்பட்டு வந்தது. கோடை விடுமுறை என்பதால் இங்கு குழந்தைகளின் வருகை அதிகமாகவே இருந்தது.
கடந்த மே 25ஆம் தேதி பெற்றோர்களுடன் வருகை தந்த சிறுவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்த விளையாட்டு மைதானத்தில் ஆனந்தமாய் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த இந்த விளையாட்டு மைதானத்தில் ஜெனரேட்டர்களை இயக்க சுமார் 3,500 லிட்டர் டீசல், பெட்ரோலும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக இந்த மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் எரியத் தொடங்கி மளமளவென்று மூன்றாம் மாடி வரை தீ பரவியது. இந்த விபத்தில், ஒட்டுமொத்த விளையாட்டு மைதானமுமே தீக்கிரையானது.
சுமார் 5 கிமீ சுற்றளவுக்கு கரும்புகை சூழ்ந்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தால், சிரிப்பு சத்தத்துடன் இருந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து குழந்தைகளும், பெற்றோர்களும் கத்தி கதறும் சத்தம் கேட்டன.
தொடர்ந்து ராஜ்கோட் உட்பட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து சென்ற வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேரத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.
இந்த கோரவிபத்தில் 9 குழந்தைகள் உட்பட 32 பேர் வரை உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது முற்றிலும் மனித தவறால் ஏற்பட்ட பேரிடர் என்று தெரிவித்த நீதிபதி தேவன் தேசாய் அமர்வு, இந்த தீவிபத்து குறித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நேற்று உத்தரவிட்டது.
இவ்விபத்து வெல்டிங் ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. காரணம் சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களால் இந்த விளையாட்டு மையம் அமைக்கப்படவில்லை.
முழுக்க முழுக்க இரும்பு, பைபர் மற்றும் மரக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு மூன்று தளங்கள் வரை கட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், ’இங்கு வெல்டிங் பணியின் போது தீப்பொறி பறந்து விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது.
இதுதொடர்பான வீடியோவில், “வெல்டிங் பணியின் போது அருகில் கிடந்த பிளாஸ்டிக் குவியல் மீது தீப்பொறி பறந்து விழுந்துள்ளது.
அது புகைந்து தீ பற்றியதும், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அங்கும் இங்குமாய் ஓடுகின்றனர். ஒரு சிலர் மட்டும் தீயை அணைக்க முயல்கின்றனர். பின்னர் அவர்களும் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்’
राजकोट गेमिंग जोन में 32 जानें लेने वाली वह चिंगारी उठी कहां से थी, देखिए CCTV वीडियो#gujarat #rajkot #gamingzone #cctvfootage #cctv pic.twitter.com/9xApM47xCz
— NDTV India (@ndtvindia) May 27, 2024
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் இந்த விளையாட்டு மையத்தின் மேலாளர் நிதின் ஜெயின், பங்குதாரர் யுவராஜ் சிங் சொலான்கி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தேடி வருவதாகவும் காவல் ஆணையர் ராஜு பர்கவா தெரிவித்துள்ளார்.
தற்போது உயிரிழந்தவர்கள் உடல்களை ஒப்படைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் முழுதும் கருகியுள்ளதால் அவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் உடல்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 10 நாட்களுக்கு முன்னதாக திருமணம் ஆன புதுமண தம்பதியினர் உயிரிழந்தனர். ராஜ்கோட்டைச் சேர்ந்த அக்ஷய் தோலாரி, கியாதி ஸ்வாலிவியா இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், இதை கொண்டாட டிஆர்பி மையத்துக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்களது கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
இவர்கள் பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், வரும் டிசம்பரில் திருமண வரவேற்பை கோலாகலமாக நடத்தி கொண்டாட மாப்பிள்ளை அக்ஷய் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தீ விபத்தில் இருவரும் உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தற்போது அமெரிக்காவில் உள்ள அக்ஷய் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் குஜராத் திரும்பிகொண்டிருக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் 5 பேரை பறிகொடுத்த ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த தேவிகபா ஜடேஜா கூறுகையில், “கோடை விடுமுறை என்பதால் ரூ.500ஆக இருந்த கட்டணம் ரூ.99ஆக குறைக்கப்பட்டிருந்தது. எங்கள் குடும்பத்தில் இருந்து 10 பேர் இந்த விளையாட்டு மைதானத்துக்கு வந்தோம்.
இதில் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். விளையாட்டு மைதானத்தின் 3 மாடிக்கும் ஒருவழி படிகட்டு மட்டுமே இருந்தது. அங்கு தீயணைப்பு சாதனங்களும் போதுமானதாக இல்லை” என்று தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையில் டிஆர்பி விளையாட்டு மைதானம், தீ தடுப்பு நடவடிக்கைகான, தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வந்தது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
இதனால் ராஜ்கோட் மாநகராட்சியின் நகரமைப்புத் துறை உதவிப் பொறியாளர் ஜெய்தீப் சவுத்ரி, உதவி நகரத் திட்ட அதிகாரி ஆர்.எம்.சி. கெளதம் ஜோஷி, ராஜ்கோட் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் துணைச் செயற் பொறியாளர் எம்.ஆர்.சுமா, காவல் ஆய்வாளர்கள் வி.ஆர்.படேல் மற்றும் என்.ஐ. ரத்தோட் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…