குஜராத் தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

இந்தியா

குஜராத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் வழக்கமாகக் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே தான் போட்டி இருக்கும்.

இந்த முறை டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபை கைப்பற்றிய ஆம் ஆத்மியும் குஜராத்தில் களம் இறங்கியது. இதனால் குஜராத்தில் மும்முனை போட்டி நிலவியது.

இந்த சூழலில் ஏற்கனவே ஏழு முறை வெற்றி பெற்ற பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளுமா, காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியைத் தன்வசம் வைத்திருந்த பாஜகவை வீழ்த்தியது போன்று குஜராத்திலும் ஆம் ஆத்மி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று சொல்லப்பட்ட குஜராத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி சுமார் 30 பேரணிகள் மற்றும் சாலை வழியாகப் பயணம் செய்து வாக்கு சேகரிப்பது என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏறத்தாழ இரண்டு மாதங்கள் குஜராத்தில் முகாமிட்டிருந்தார்.

இவர்கள் மட்டுமின்றி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குஜராத்தில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

பாஜகவைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் பிரச்சாரம் செய்தனர்.

ஆனால் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு பேரணிகளில் மட்டுமே உரையாற்றினார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்தே பரப்புரையில் ஈடுபடுவது உள்ளிட்ட பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 37 மையங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் உள்ளூர் போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் படை, மத்திய ஆயுதப்படை போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில் பெரும்பான்மையைப் பெற 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

களத்தில் முதல்வர் பூபேந்திர படேல், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, உட்பட மொத்தம் 1,621 வேட்பாளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் பாஜக 99, காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில் 100-க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து குஜராத்தில் பாஜகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா என இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

பிரியா

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் உதயநிதி… மூன்று துறைகள் இவைதான்! 

மாண்டஸ் புயல்: எங்கெங்கு பள்ளிகளுக்கு விடுமுறை?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *