உலகின் அனைத்து பிரச்சனைகளும் எப்போது தீரும்? – நீதிபதியின் தீர்ப்பால் சலசலப்பு

இந்தியா

வெட்டுவதற்கு மாடுகளை கடத்தி சென்ற இளைஞருக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

கடந்த 2020ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து குஜராத்திற்கு 16 பசு மற்றும் எருமை மாடுகளை சட்ட விரோதமாக கடத்தி வந்ததாக 22 வயதான முகமது அமீன் என்ற இளைஞரை குஜராத் போலீசார்.கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் குஜராத்தின் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

சமீபத்தில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சமீர் வினோத் சந்திரா வியாஸ், குற்றஞ்சாட்டப்பட்ட முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அத்துடன் அவர் கூறிய பசுவதை தொடர்பான கருத்துகள் சமூகவலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

நீதிபதி சமீர் தனது தீர்ப்பில், “இந்த உலகில் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பசுக்கள் கவலையுடன் இருக்கும் இடத்தில் செல்வங்கள் அழிந்து போகும்.

பசு ஒரு விலங்கு அல்ல, அது ஒரு தாய். அது 60 கோடி புனித தலங்கள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் கிரகம் ஆகும். எனவே, பசுவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம். ஆனால் அதற்கு மாறாக இந்தச் சூழ்நிலையில் மாடுகளை அறுப்பதற்காக விற்கபடுவதும், அவை கடத்தி செல்லப்படுவதும் வேதனை தருகிறது.

பசு சாணத்தை வீடுகளில் பூசினால் அணு கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல் உண்மை. பசுவின் கோமியம் பல தீராத நோய்களுக்கு மருந்தாகும்.

என்றைக்கு பூமியில் பசுவின் ரத்தம் சிந்தாமல் இருக்கிறதோ அன்று தான் உலகின் அனைத்து பிரச்னைகளும் தீரும்” என்று தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதல் இறைச்சிக்காக மாடுகளை கொல்லக்கூடாது என்ற வாதங்கள் வலுவடைந்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு அழைத்து செல்வோரை ‘பசு கடத்தல்காரர்கள்‘ எனக் கூறி, அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாடுகளை கடத்தியது தொடர்பாக இளைஞருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பில் பசுக்களை குறித்து பேசியிருப்பது விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை எய்ம்ஸ்: கல்லூரியை பார்க்காமலே பட்டம் பெறும் மாணவர்கள்! – சு. வெங்கடேசன்

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் தேமுதிக : வேட்பாளர் அறிவிப்பு!

+1
0
+1
2
+1
2
+1
0
+1
4
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.