குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இன்று (அக்டோபர் 30) இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், மோர்பி பகுதியில் மச்சு என்ற பெயரில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக அப்பகுதியில் தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியாகத்தான் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். வழக்கம்போல் இன்று (அக்டோபர் 30) மாலையும் அப்பாலத்தில் சத்பூஜைக்காக சுமார் 500 பேர் சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக அப்பாலம் இடிந்து விழுந்தது. அதில் ஆற்றுக்குள் 350க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், 32 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநில அரசு உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த மோர்பி பாலத்தின், புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில்தான் நடைபெற்று முடிந்தன.
இதையடுத்து, கடந்த 26ம் தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்