கேரளாவில் காதலரான ஷாரோன் என்ற இளைஞருக்கு விஷம் வைத்து கொன்ற கரீஷ்மா என்ற 24 வயது இளம் பெண்ணுக்கு சமீபத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, கரீஷ்மா பற்றி மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஷாரோனுக்கு முன்னரே மற்றொரு இளைஞரை கரீஷ்மா காதலித்து அவரை ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அந்த இளைஞர் கூறுகையில், ‘நான் கரீஷ்மாவை கோவிலில் வைத்து பார்த்தேன். அப்படியே பழக்கமானது.ஐ.ஏ.எஸ் படிக்க போவதாக என்னிடத்தில் கூறினார். கொஞ்சம் கொஞ்சமாக பழகி காதலிக்க தொடங்கினோம். ஐ.ஏ.எஸ். கோச்சிங்கிற்காக ஒரு முறை எனது பைக்கில் அவர் வந்த போது, கீழே விழுந்ததில் கரீஷ்மாவின் முன் பல் உடைந்து போனது. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்தது. இதனால், கொஞ்சம் அவர் மீது கூடுதல் பாசம் வைத்தேன்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. உடனடியாக, அவருடனான அனைத்து தொடர்பையும் துண்டித்தேன். நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்றார். நான் அதற்கு மறுத்து விட்டேன். கரீஷ்மாவின் கல்லூரி தோழிகள் அவரை வித்தியாசமானவர் என்று கூறுவார்கள். நான் அவர் ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருவார் என்று நினைத்தேன். ஆனால், இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
ராணுவ அதிகாரியுடன் அவருக்கு நிச்சயம் நடந்தது எனக்கு தெரியும். நாம் காதலித்த பெண் நன்றாக வாழட்டும் என்று நினைத்தேன். ஆனால், ஷாரோனுக்கு நடந்த சம்பவம் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இப்படி ஒரு சம்பவத்தை கரீஷ்மா செய்தே இருக்க கூடாது. எனக்கு வேறொரு பெண்ணை காதலிக்க வேண்டுமென்ற ஆசை கூட இப்போது இல்லாமல் போய் விட்டது ‘என்று தெரிவித்துள்ளார்.