“ஆளுநர்கள் அரசியலமைப்புபடிதான் செயல்பட வேண்டும்”: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

இந்தியா

ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும் என்றும் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றவே பணமதிப்பழிப்பு பயன்பட்டது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்புத் தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.

முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்று தமிழ்நாடு , பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள ஆளுநருக்கு எதிராகவும் அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா, “மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காததால் இப்போது எல்லாம் மாநில ஆளுநர்கள் வழக்கின் ஒரு புள்ளியாக இருக்கிறார்கள். அரசியலமைப்பின் படி இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர்கள் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும்.அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படும் நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.

பணமதிப்பழிப்பு குறித்து பேசிய அவர், “நவம்பர் 8, 2016 அன்று என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். 86% கரன்சி 500 மற்றும் 1,000 நோட்டுகளாக இருந்தது. இதில், புழக்கத்தில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் 98 சதவிகிதம் திரும்ப பெறப்பட்டது. அப்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, பணத்தை மாற்றிய ஒரு தொழிலாளியின் நிலை பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

98 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டதால் கருப்பு பண ஒழிப்பு என்ற இலக்கு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு இது நல்ல வழி என்றுதான் நான் நினைக்கிறேன். பணமதிப்பழிப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினேன்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

திகில் கிளப்பும் அரண்மனை 4 ட்ரெய்லர்..!

இந்தி எதிர்ப்பை ’பிஞ்சு போன செருப்பு’ என்ற அண்ணாமலை : வலுக்கும் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
1

1 thought on ““ஆளுநர்கள் அரசியலமைப்புபடிதான் செயல்பட வேண்டும்”: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

  1. மகராசி ஜட்ஜம்மா சொன்னது இப்பவாச்சும் மக்களுக்கு புரிஞ்சா சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *