“தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் அலர்ஜியாக இருக்கிறது” என்று தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காரைக்காலில் உள்ள ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1 மற்றும் 2 ஆகிய நீதிமன்றங்கள் திறப்பு விழா இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று நீதிமன்றங்களை திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புதுச்சேரி தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன், காரைக்கால் மாவட்ட நீதிபதி கே.அல்லி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், சட்ட அமைச்சர் கே.லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழிசை செளந்தரராஜன், “உலகத்தில் நீதி வழுவாமல் இருந்த நாடு தமிழ்நாடு என்பதில் பெருமை கொள்ள வேண்டும். நடுநிலை தவறாத தராசைப் போல நீதித்துறை இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார்.
இன்று உலகம் முழுவதும் நீதித்துறைக்கு இருக்கும் சின்னம் துலாக்கோல்தான். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீதி வழுவாமல் இருக்கும் துலாக்கோல்போல் நீதித்துறை இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டி இருக்கிறார் என்பது சிறப்பு. மனு நீதி சோழனை போல் நீதி வழங்கிய மன்னர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனைகள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில்!
அமித் ஷா -பன்னீர் சந்திப்பு எப்போது? வைத்திலிங்கம் தகவல்!