மயக்கம் அடைந்த பயணி- மருத்துவரான ஆளுநர் தமிழிசை: விமானப் பயணத்தில் வெளிப்பட்ட மனித நேயம்!

இந்தியா

விமானத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய பயணி ஒருவருக்கு ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சிகிச்சை அளித்து பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசுத் தலைவர் பிரிவுசார விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்தார். விழா முடிந்து, நேற்று இரவு 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டார்.

அதிகாலை 3.30 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, வயதான ஆண் பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் செருகிய நிலையில் மயக்கம் அடித்து அப்படியே சாய்ந்துவிட்டார். இதனை கவனித்த பணிப்பெண், ”இங்கு டாக்டர் யாராவது இருக்கிறீர்களா? பயணி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தொடர்ந்து அறிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது விமானத்தின் முன்பகுதியில் இருந்து இதனைக் கேட்ட ஆளுநர் தமிழிசை, உடனடியாக எழுந்து பின் பகுதியில் இருந்த அந்த பயணியை நோக்கி விரைந்தார். அவரை பரிசோதித்து, தேவையான முதல் உதவி சிகிச்சைகளை அளித்தார். மேலும், அப்பயணி செரிமானக் கோளாறால் அவதிப்பட்டதை உணர்ந்த தமிழிசை, சில மருந்துகளையும் வழங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு பயணி திரும்பிய நிலையில், அவருக்கு நம்பிக்கை அளித்து அவர் அருகிலேயே அமர்ந்து ஐதராபாத் வரை பயணம் செய்துள்ளார். விமான நிலையம் வந்தடைந்ததும், பயணியை அங்குள்ள மருத்துவ குழுவினரிடம் ஒப்படைத்து விட்டு அதன் பின்பே ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார் தமிழிசை.

இவை அனைத்தையும் அதே விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி செல்போனில் புகைப்படம் எடுத்த நிலையில், அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட பலரும், பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி, தக்க சமயத்தில் சக பயணி ஒருவருக்கு சிகிச்சை அளித்ததற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை பாராட்டி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *