Farmers will conduct Maha Panchayat

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!

இந்தியா

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். Farmers will conduct Maha Panchayat

பஞ்சாப் ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை அரசுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

நேற்று டெல்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் சுபாகரன் என்ற இளம் விவசாயி உயிரிழந்தார்.

இந்தசூழலில், விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக தங்களது போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறுகையில், “ஹரியானா போலீசார் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து, எங்களை நோக்கி சுட்டதோடு, எங்கள் டிராக்டர்களையும் சேதப்படுத்தினர்.

ஹரியானா முதல்வர் மற்றும் ஹரியானா உள்துறை அமைச்சர் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விவசாயியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

வரும் மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் ‘மகா பஞ்சாயத்து’ நடைபெறும். அதற்காக தயாராகி வருகிறோம்” என்று அறிவித்தார்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,

“நாங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தோம், இன்றும் தயாராக இருக்கிறோம், எதிர்காலத்திலும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராகவே இருக்கிறோம்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிக வளர்ச்சியை அடையவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது .

2024-25 பருவத்திற்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தி ரூ.340 ஆக உயர்த்தியுள்ளது, உலகிலேயே கரும்புக்கு இந்தியாதான் அதிக விலை கொடுக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கோதுமை, நெல், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய மோடி அரசு ரூ.18.39 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ரூ.5.5 லட்சம் கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது

உலகம் முழுவதும் உரங்களின் விலை அதிகரித்த போதிலும், விவசாயிகளுக்கு உரங்களின் விலையை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. விவசாயிகளுக்கு உரங்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வரை மானியம் வழங்கியது” என விளக்கமளித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அடுத்தக்கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று  விவசாய சங்கங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“ED, சிபிஐ வைத்து கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்”: அமைச்சர் பேட்டி!

சிங்கத்துக்கு பேரும், சோறும்: அப்டேட் குமாரு

Farmers will conduct Maha Panchayat

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *