உலகெங்கிலும் உள்ள தெருக்களை, சாலைகளை மிக நுணுக்கமாக புகைப்படம் எடுத்து பயனர்கள் தெரிந்துகொள்ளும் ஸ்ட்ரீட் வியூ வசதியை இந்தியாவிலும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 27) 10 இந்திய நகரங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி இந்தாண்டு இறுதிக்குள் 50 நகரங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று கூகுள் மேப்ஸ். பெரும்பாலான மக்கள் பயணங்களை எளிமையாக மேற்கொள்ள, குழப்பம் அடையாமல் இருக்க கூகுள் மேப்ஸ் பெரும் உதவியாக இருக்கிறது. கூகுள் மேப் மூலம் நாம் இருக்கும் இடத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு ஒரு இடத்தை அடையும் தூரம், நேரம், வழியில் இருக்கும் வாகன நெரிசல் என அனைத்தையும் காட்டிவிடும் கூகுள் மேப்ஸ். மேலும் உணவகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை அருகில் எங்கு இருக்கிறது. எவ்வளவு தூரத்தில் போகலாம் என சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வரப் பிரசாதமாக உள்ளது.
தற்போது கூகுளும் தனது மேப்ஸ் தளத்தை தொடர்ந்து பல்வேறு வகைகளில் மேம்படுத்தி வருகிறது. 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த ‘street view’ வசதியை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பரிசோதனை முயற்சியில் இருந்த இந்த திட்டம் பெங்களூர், சென்னை, டெல்லி, புனே, மும்பை, ஹைதராபாத், உட்பட பத்து இந்திய நகரங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 700,000 கி.மீ. தொலைவை street view வசதியில் பார்க்க முடியும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடுத்துகாட்டாக சென்னையில் அறிமுகமாகியுள்ள இந்த வசதியின் மூலம் அனைத்து சாலைகளையும் பார்க்கலாம்.
மேலும் ஒரு இடத்தில் அமர்ந்த படியே உலகின் எந்த மூலைக்கும் சென்று அந்த இடத்தை நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம்..
இந்த street view வசதியின் மூலம் நமக்கு அருகில் உள்ள இடங்களை முப்பரிமான வகையில் 360 டிகிரியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது..
க.சீனிவாசன்