செலவைக் குறைக்க கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடியாகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தின்பண்டங்களை நிறுத்தியுள்ளது.
உலகப் பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்தப் பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம்பெற்றது.
இதன்படி, கடந்த ஜனவரி மூன்றாம் வாரத்தில் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது.
இதற்காக அந்தப் பணியாளர்களுக்கு தனியாக இ-மெயில் வழியே தகவல் அனுப்பப்பட்டது. சமீபத்தில் இந்திய ஊழியர்களில் 450 நபரை பணி நீக்கம் செய்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கையை அடுத்து, பணியாளர்களுக்கான பல்வேறு சேவைகளை கைவிடுவது என்று முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஊழியர்களுக்கு பணியின்போது மசாஜ் சேவை வழங்குவது, உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதற்கான வகுப்புகள், பழுதடைந்த லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக ஒன்றை மாற்றி தருவது,
கபேக்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் நிதி துறை தலைவர் ரூத் போரட் அனைத்து பணியாளர்களுக்கும் இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், 2023-ம் ஆண்டில் நீண்டகால சேமிப்புக்கான இலக்கை நிறுவனம் அடையும் என தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள காகிதங்களை இணைக்க உதவும் ஸ்டேபிளர்கள் மற்றும் ஒட்ட பயன்படும் டேப்புகள் உள்ளிட்டவற்றையும் கூட கூகுள் நிறுவனம் வழங்காமல் அவற்றை நிறுத்தி விடுவது என முடிவு செய்து உள்ளது.
பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் வேலை செய்ய, ஒவ்வோர் ஊழியருக்கும் தனியாக மேசை, கணினி என இருக்கும்.
ஆனால் கடந்த மாதம் கூகுள் நிறுவனம் ‘செலவு குறைப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், நிறுவனத்துக்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்க, ஒரே மேசையைப் பல ஊழியர்களும் பகிர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளது. பல ஊழியர்கள் ஒரே மேஜையைப் பகிர்ந்து கொள்ளும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்காகத் `திங்கள் மற்றும் புதன்’ அல்லது `செவ்வாய் மற்றும் வியாழன்’ என ஊழியர்கள் சுழற்சி முறையில் வந்து பணிபுரிய கூறியுள்ளது. அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே மேஜையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மற்ற நாள்களில் அலுவலகத்துக்கு வரலாம், இருக்கும் இடத்தில் அமர்ந்து பணிபுரியலாம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகளால் இத்தகைய சூழலை ஊழியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
ராஜ்