திருச்சூரில் இருந்து கோவைக்கு காரில் கொண்டு வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பிரபலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அருண் சன்னி என்பவர் தங்க வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தனது நண்பர் தாமஸுடன் கோவைக்கு காரில் 2.5 கிலோ தங்கத்தை கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அவரை பின் தொடர்ந்து மூன்று கார்களில் வந்த கும்பல் ஒன்று திருச்சூர் குதிரன் சுரங்கப் பாதை அருகே அருண் சன்னியின் காரை வழிமறித்து நிறுத்தியது.
தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தங்களது காரில் ஏற்றினர். பின்னர், அவர்களிடத்தில் இருந்த 2.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த பிறகு, ஆளில்லாத பகுதியில் இறக்கி விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்த குதிரன் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் சந்தேகத்துக்கு இடமாக வந்த சித்திக், நிஷாந்த், நிகில் ஆகியோரை தடுத்து விசாரித்தனர்.
விசாரணையில் இவர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. காரில் தங்கத்தை கடத்தி செல்ல மூளையாக செயல்பட்டது அருகே பந்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியை சேர்ந்த ரோஷன் வர்கீஸ் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரோஷன் வர்கீஸ் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமானவர் என்பதும், அவரை சுமார் 50,000 பேர் பின் தொடர்வதும் தெரியவந்துள்ளது. ஆனாலும் ரோஷன் ஒரு மோசமான திருடன் என்பது அவரது ஃபாலோயர்களுக்கு தெரியாது. 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரோஷன் மீது 22 குற்ற வழக்குகள் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் பிரியங்காவுக்கு கிடைத்தது என்ன?
ஜாபர் சேட் வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!