இஸ்ரேல் நாட்டின் மீது நேற்று (அக்டோபர் 7) பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி திடீர் தாக்குதலைத் தொடங்கியது.
இதற்கு இஸ்ரேலும் உடனடியாக பதிலடி கொடுக்கத் தொடங்கியதோடு போர் பிரகடனத்தையும் செய்திருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு.
இஸ்ரேலுக்கு இந்தியா, கனடா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஹமாஸ் அமைப்புக்கு பின்னால் ஈரான் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்திருக்கும் இந்த போர், உலகம் முழுதிலும் தங்கத்தின் விலையையும் எகிற வைக்கும் என்ற பதற்றம் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தைகள் சரிவடையும் என்ற அச்சம் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களின் கவலையை அதிகரித்துள்ளது. மறுபுறம், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதிகரித்து வரும் புவி-அரசியல் பதற்றம் காரணமாக தங்க கொள்முதல் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உண்மையில், போர் மற்றும் பிற பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகு, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. ஏனெனில், இதுபோன்ற சூழ்நிலைகளில், முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக கருதுகின்றனர்.
ஸ்பார்டன் கேபிடல் செக்யூரிட்டிஸின் தலைமை சந்தைப் பொருளாதார நிபுணரான பீட்டர் கார்டிலோ, “சர்வதேச கொந்தளிப்பு காலங்களில் பாதுகாப்பான முதலீடுக்கு தங்கம் ஒரு நல்ல வழி” என்று கூறுகிறார்.
ஹெச்டிஎப்சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிஸ் மற்றும் கரன்சிஸ் பிரிவு தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், “இஸ்ரேல் மற்றும் காஸாவில் நடந்த போரின் காரணமாக, தங்கத்தின் தேவை சந்தையில் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.700 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் சில இடங்களில் தங்கக்கட்டி விற்பனையாளர்கள் தங்கத்தை விற்க மறுத்து வருகின்றனர். தங்கம் விலை இன்னும் உயரும் என்பதால் அவர்கள் அதற்காகக் காத்திருக்கிறார்கள்.
வெள்ளியின் விலையும் 1 கிலோவுக்கு 1000 ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பு 1 கிலோவுக்கு 2500 ரூபாயாக இருந்த வெள்ளியின் பிரீமியம் அதிகரித்துள்ளது” என்றும் அனுஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வங்கியாளரும், பொருளாதார கட்டுரைகளை எழுதி வருபவருமான மணியன் கலியமூர்த்தியிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.
“வாழ்வில் ஏற்படும் நெருக்கடியான நேரங்களில் கை கொடுக்கும் என்றுதான் நம்மில் பலர் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்கிறோம். இதே மனநிலைதான் சர்வேச முதலீட்டாளர்களுக்கும் இருக்கிறது. போர் உள்ளிட்ட சர்வதேச நெருக்கடியான நேரங்களில் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதே பணத்துக்கான பாதுகாப்பு என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உலகத்திலே விற்பனையாகிற தங்கத்தில் 30% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. நமக்கு அடுத்தபடியாகத்தான் சீனா தங்கத்தில் முதலீடு செய்கிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கொரோனா நேரத்திலும் தங்கம் விலை ஏறியது. தங்கத்தின் மீதான முதலீடு அப்போது அதிகமானது. இக்கட்டான சூழலில் பாரம்பரியமான நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாட்டு மக்கள் தங்கத்தை நோக்கிதான் செல்கிறார்கள்.
இந்தியாவின் தங்க இறக்குமதி என்பது வளைகுடா நாடுகளில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும்தான் 80% நடக்கிறது. இஸ்ரேல் போர் பதற்றம் குறைக்கப்படும் வரை இந்த பொருளாதாரப் பதற்றமும் இருக்கும். அதேநேரம் இதையே காரணமாக வைத்து தங்க வியாபாரிகள் பதுக்கல் நடவடிக்கைகளில் இறங்குவது சந்தையில் இயல்பாகிவிட்டது. இதை அரசு கடுமையாக கண்காணிக்க வேண்டும்” என்கிறார்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
INDvsAUS: டக் அவுட் ஆன மார்ஷ்… சாதனை படைத்த விராட் கோலி
Asian Games 2023: 107 பதக்கங்களுடன் நிறைவு செய்த ‘இந்தியா’.. எந்த பிரிவில் எவ்வளவு?