தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் ஒரு பகுதியாக உள்ள கொக்கி, திருகாணி உள்ளிட்ட பொருட்கள் ஃபைண்டிங்கஸ் (findings) என்று அழைக்கப்படும். இந்த பொருட்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி ஏற்கனவே 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் அடிப்படை சுங்க வரி 10% மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) 5% அடங்கும்.
உலோகங்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் ’செலவழிக்கப்பட்ட வினையூக்கிகள்’ (spent catalysts) மீதான வரியை 14.35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வெள்ளியின் அடிப்படை இறக்குமதி வரி 7.5% இருந்து 10% ஆகவும், இறக்குமதிக்கான வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) 2.5% லிருந்து 5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் சுத்திகரிக்கப்படாத வெள்ளியின் அடிப்படை இறக்குமதி வரி 10% ஆகவும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி 14.35% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வானது இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில் இந்த வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழ்நாடு: 2024 மக்களவைத் தேர்தல் தேதி எப்போது?
’மய்யத்தின் 2 நிபந்தனைகள்… ஏற்காவிட்டால் தனித்துப்போட்டி’ : மவுரியா