காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று (செப்டம்பர் 26) துவங்கியுள்ளார்.
வெள்ளை, நீலம், மஞ்சள் நிறமுள்ள மூவர்ண கொடியை தனது புதிய கட்சியின் கொடியாக அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், 2005 முதல் 2008 வரை ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்தார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் குலாம் நபி ஆசாத் செயல்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து, குலாம் நபி ஆசாத் விலகினார்.

தற்போது புதிய கட்சி தொடங்கியுள்ள அவர் இதுகுறித்து கூறும்போது, “ஜனநாயக ஆசாத் கட்சி மதச்சார்பற்றதாகவும், ஜனநாயக ரீதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கும்.
எனது கட்சிக்கான பெயரை நான் முடிவு செய்யவில்லை. ஜம்மு, காஷ்மீர் மக்கள் தான் எனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மறுசீரமைப்புக்காக எனது கட்சி பாடுபடும்.
மேலும் மாநில உரிமைக்காகவும், சொந்த மாநிலத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் முக்கிய பங்காற்றும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து எனது ஆதரவாளர்களுடன் வெளியேறியதால் சிலர் சமூக வலைதளங்களில் என்னை இழிவுபடுத்துகிறார்கள்.
நாங்கள் ரத்தம் சிந்தி காங்கிரஸ் கட்சியை உருவாக்கியுள்ளோம்.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியினர் கணினிகளில் ட்வீட் மட்டுமே செய்கின்றனர். அதனால் தான் காங்கிரஸ் கட்சியை களத்தில் காணவில்லை. “என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.
செல்வம்
சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!