24வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள், ராணுவத்தினர், பொதுமக்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் முயற்சித்தனர். ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடந்த யுத்தத்தில் நமது நாட்டு ராணுவ வீரர்கள் பாகிஸ்தானை போராடி வீழ்த்தினர்.
இந்த கடுமையான யுத்தத்தில் 527 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 1363 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதேநேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 700 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டு மாவீரர் மேஜர் சரவணன் உள்ளிட்ட வீரர்களுக்கு தேசம் பல விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத கார்கில் போர் வெற்றியை முன்னிட்டு ஜூலை 26ம் தேதி ஆண்டு தோறும் ‘கார்கில் வெற்றி தினம்’ (கார்கில் விஜய் திவாஸ்) என்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று லடாக்கில் உள்ள திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது மாவீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
மேலும், திராஸ் போர் நினைவிடத்தின் மீது போர் விமானங்கள் பறந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
போரில் ஈடுபட தயாராக வேண்டும்!
இதனைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ”இந்தியா தனது மரியாதையையும் கண்ணியத்தையும் தக்க வைத்துக் கொள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கடக்கத் தயாராக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் ரஷ்யா-உக்ரைன் போரை உதாரணமாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், ”அண்மை காலமாக போர்கள் நீடித்து வரும் நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் நேரடியாக போரில் ஈடுபட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மாவீரர்களுக்கு தலைவணங்குகிறேன்
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் கார்கில் போர் மாவீரர்களை நினைவு கூர்ந்துள்ளார். அவர், ”கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், என் இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா!” என பதிவிட்டுள்ளார்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைந்த ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “கார்கில் வெற்றி தினத்தில் நமது ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், சக இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கார்கில் போரில் நமது தாய்நாட்டைக் காக்க மிக உயர்ந்த தியாகம் செய்த நமது வீரத் தியாகிகளுக்கு வணக்கங்கள்.
அவர்களை நினைத்து பெருமை கொள்கிறோம். அவர்களின் தளராத தைரியமும், வீரமும் தலைமுறைகளை ஊக்குவிக்கும். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீர வணக்கம் தெரிவித்துள்ளார். அவர், “கார்கில் வெற்றி தினத்தின் இந்தியாவின் எல்லையை காக்க தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் வீரவணக்கங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்.ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சியில் முதல்வர் மரியாதை!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக திருச்சி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதேபோன்று சென்னை போர் நினைவு சின்னத்தில் ராணுவ அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கிறிஸ்டோபர் ஜெமா
தேமுதிக – பாஜக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்!
மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் : சபாநாயகர் ஏற்பு!