Imran Khan 10 years in prison
அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் மஹ்மூத் குரேஷிக்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (ஜனவரி 9) உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு வெறும் 9 நாட்களே உள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து பெறப்பட்ட தூதரக கேபிளை கசியவிட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
ராவல்பிண்டியில் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைவருமான இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இன்று ஆஜராகினர்.
அப்போது தலைமை நீதிபதி அபுல் ஹஸ்னத் சுல்கர்னைன் இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷி இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். மேலும் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
“இது நீதியின் கொலை” என்று மனித உரிமை ஆர்வலரும், அரசியல் ஆய்வாளருமான தௌசீப் அகமது கான் தெரிவித்துள்ள நிலையில்,
”இந்த சட்டவிரோத முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம். மேல்முறையீடு செய்வோம்” என்று பிடிஐ கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தென்மேற்கு பாகிஸ்தானில் பி.டி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்த அந்நாட்டு போலீசார் பின்னர் கைது செய்தனர்.
இதில் பிடிஐ கட்சியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீர்ப்பின் மூலம் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் நெருங்கியுள்ள வேளையில் இம்ரான்கானின் பிடிஐ கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், விலையுயர்ந்த பொருட்களை விற்று கிடைத்த பணத்தை மோசடி செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
இதுமட்டுமின்றி இம்ரான் கான் மீது அடுக்கடுக்காக சுமார் 150 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்ச்சையான சண்டிகர் மேயர் தேர்தல் : நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல்!
கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் ஐசியூவில் அனுமதி… விமானப்பயணத்தில் நடந்தது என்ன?
Imran Khan 10 years in prison