உங்க பொங்க சோறும் வேண்டாம் பூசாரித்தனமும் வேண்டாம் : டிரம்ப் முகத்தில் கரி பூசிய காசா

Published On:

| By Kumaresan M

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நகரமே சிதிலமடைந்து கிடக்கிறது.

சமீபத்தில் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் அரசுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

தற்போது, அமைதி நிலவினாலும் காசா நகரமே பாழடைந்து கிடக்கிறது. காசாவில் 3ல் ஒரு பங்கு கட்டடங்கள் தரைமட்டாகியுள்ளது. இடிபாடுகளை அகற்றவே ஆண்டு கணக்கில் ஆகும் என்கிறார்கள். எனினும், காசாவை விட்டு வெளியேறிய பாலஸ்தீனர்கள் அங்கு திரும்பி வசிக்க தொடங்கியுள்ளனர். நகரத்தை மீண்டும் கட்டமைக்க பல ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதில், “காசா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கி கொள்ளும். காசாவில் உள்ள 20 லட்சம்பேர் தங்களை ஏற்றுக்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும். காசாவில் இடிந்துள்ள கட்டிடங்களையும் அகற்றி அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம்.

இதன் மூலம் காசாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும், மக்கள் வசிக்கும் பகுதியாகவும் மாறும். மத்திய கிழக்கின் கடலோர சுற்றுலா பகுதியாக காசா மாறலாம். காசாவுக்கு நான் விரைவில் செல்லவுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். டிரம்பின் இந்த கருத்து வரலாற்றை மாற்றும் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், சவுதி அரேபியா டிரம்பின் கருத்தை முற்றிலும் நிராகரித்து விட்டது. “எந்த காரணத்தைக் கொண்டும் பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேற மாட்டார்கள். பாலஸ்தீனியர்களுக்கு தனி நாடு உருவாகும் வரை இது நடக்காது” என்று சவுதி அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் இயக்கத்துக்கு போட்டியாக ஃபதா என்ற அமைப்பை அப்பாஸ் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் கூறுகையில், “காசா பகுதி பாலஸ்தீனத்துடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் நிலம், உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டோம். பாலஸ்தீன அரசை அமைக்காமல் இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ வாய்ப்பே இல்லை” என்கிறார்.

பிரிட்டனுக்கான பாலஸ்தீனிய தூதுக்குழுவின் தலைவர் ஹுசம் ஸோம்லாட் கூறுகையில்,”இது ஒரு இனத்தை அழிப்பதற்கு சமமானது. சொந்த மண்ணில் இருந்து எங்கள் மக்களை வெளியேற சொல்வது சட்ட விரோதமானது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share