விண்ணப்பத்தை நிராகரித்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கௌதம் அதானி கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவர் கௌதம் அதானி. கிட்டடத்தட்ட 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட அதானி ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்.
கடந்த 1977 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் மும்பை ஜெய் ஹிந்த் கல்லூரியில் படிக்க கௌதம் அதானி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே, இவரின் சகோதரர் வினோத் அதே கல்லூரியில்தான் படித்தார். ஆனால், அதானியின் விண்ணப்பத்தை கல்லூரி நிராகரித்து விட்டது. அதற்கு, பிறகு கௌதம் அதானி படிக்கவில்லை.
மாறாக வைரம் பட்டை தீட்டும் பணியை கற்றுக் கொண்டார். 2 வருடங்கள் வைரம் பட்டை தீட்டும் தொழிலை கற்றுக் கொண்டு ,குஜராத்தில் சென்று தொழில் முனைவோராக மாறினார். தற்போது, அதானி குழுமத்தின் வளர்ச்சி பற்றி யாரும் விளக்கவே தேவையில்லை. இந்தியாவில் 13 துறைமுகங்கள், 7 விமான நிலையங்களை அதானி குழுமம் நடத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில், விண்ணப்பத்தை நிராகரித்த அதே ஜெய் ஹிந்த் கல்லூரி ஆசிரியர் தினத்துக்கு சிறப்பு உரையாற்ற கௌதம் அதானியை அழைத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கௌதம் அதானி கலந்து கொண்டார். ஜெய்ஹிந்த் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் விக்ரம் நங்கானி, நமது கல்லூரியில் படிக்க கௌதம் அதானி விண்ணப்பித்த காரணத்தினால் அவரும் முன்னாள் மாணவராகவே கருதப்படுவார் என்று கூறி அதானியை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அதானி, நீங்கள் ஏன் முறையான கல்வி படிக்க வில்லை என்று என்னிடத்தில் நிறைய பேர் கேட்கிறார்கள். தடைகளை தகர்த்து எரியும் தைரியம் எனக்கு இருந்தது. இதனால், நான் படிப்பை தாண்டி மாற்று வழியை தேர்வு செய்தேன். தடைகளை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தால், வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டிவி காமெடி முதல் பள்ளி டிராஜிடி வரை… யார் இந்த மோட்டிவேட்டர் மகா விஷ்ணு?
900 கோல்கள்… கால்பந்து வரலாற்றில் தொட முடியாத சாதனை படைத்த ரொனால்டோ